தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூர் நிலவழிச் சோதனைச்சாவடிகளில் மோட்டார் சைக்கிள்களுக்கான கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை

2 mins read
c83b414c-ce31-4442-88d7-e790a6c3d113
அக்டோபர் 15லிருந்து தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட குடிநுழைவு அணுகுமுறை மோட்டார் சைக்கிள்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜோகூர் மாநிலத்தின் பொதுப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுவின் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சாலே கூறினார். - படம்: த ஸ்டார்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்துக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இரண்டு நிலவழிச் சோதனைச்சாவடிகள் வழியாகச் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் விரைவாகக் கடந்து செல்ல கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை பயன்படுத்தப்படும்.

இந்த அணுகுமுறை ஏற்கெனவே கார்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மோட்டார் சைக்கிள்களுக்கும் அது விரிவுபடுத்தப்படும்.

அக்டோபர் 15லிருந்து இந்த தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட குடிநுழைவு அணுகுமுறை மோட்டார் சைக்கிள்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜோகூர் மாநிலத்தின் பொதுப் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்பு, தொடர்புக் குழுவின் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சாலே கூறினார்.

சுல்தான் இஸ்கந்தர் சுங்க, குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் வளாகத்தில் உள்ள ஏழு மோட்டார் சைக்கிள் தடங்களிலும் சுல்தான் அபு பக்கர் சிஐகியூ வளாகத்தில் உள்ள எட்டு மோட்டார் சைக்கிள் தடங்களிலும் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.

“அனைத்துத் தடங்களிலும் கியூஆர் வருடிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றை மோட்டார் சைக்கிள் மூலம் பயணம் செய்பவர்கள் பயன்படுத்தலாம்,” என்று திரு முகம்மது ஃபஸ்லி தெரிவித்தார்.

இதற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்து பதிவு செய்துகொள்ளுமாறு அவர் மோட்டார் சைக்கிள் மூலம் பயணம் செய்பவர்களைக் கேட்டுக்கொண்டார்.

தற்போது பயன்பாட்டில் உள்ள மைபார்டர்பாஸ்கியூஆர் முறையையும் மோட்டார் சைக்கிளோட்டிகள் பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட குடிநுழைவு முறை பயணிகள் வாகனங்களுக்கு முதன்முதலாக செப்டம்பர் 22ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது அதை கார்கள் மட்டுமே பயன்படுத்தலாம். மலேசியர்கள், சிங்கப்பூரர்கள், வெளிநாட்டவர்கள் ஆகியோர் அதைப் பயன்படுத்தலாம்.

63 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையைப் பயன்படுத்தி மலேசியாவுக்குள் நுழையலாம்.

71 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறையைப் பயன்படுத்தி மலேசியாவிலிருந்து புறப்பட்டுச் செல்லலாம்.

கியூஆர் குறியீட்டு குடிநுழைவு முறைக்கான செயலியைப் பொறுத்தவரை, இதுவரை 50,000க்கும் மேற்பட்ட பதிவிறக்கங்கள் பதிவாகி உள்ளன.

குறிப்புச் சொற்கள்