மலேசியாவில் கியூஆர் குறியீட்டு மோசடிகள் அதிகரிப்பு; $9.4 மில்லியன் இழப்பு

மலேசியாவில் கியூஆர் குறியீட்டு மோசடிகள் அதிகரிப்பு; $9.4 மில்லியன் இழப்பு

2 mins read
c91f6715-7062-47e0-9c96-ce77fe8f882f
சிலாங்கூரில்தான் அதிக அளவில் கியூஆர் குறியீட்டு மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

கோலாலம்பூர்: மலேசியாவில் 2026ஆம் ஆண்டின் முற்பாதியில் 5,000க்கும் அதிகமான கியூஆர் குறியீட்டு மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றால் ஏறத்தாழ 30 மில்லியன் ரிங்கிட் (S$9.44 மில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளது.

‘குவிஷிங்’ (Quishing) என்று அழைக்கப்படும் இந்த மோசடி முறை 2023ஆம் ஆண்டுமுதல் வெகுவாக அதிகரித்துள்ளதாக புக்கிட் அமான் வணிகக் குற்ற புலனாய்வுத் துறை இயக்குநர் ருஸ்டி முகம்மது ஈசா தெரிவித்தார்.

கியூஆர் குறியீடுகள்மூலம் பொதுமக்களைப் போலி இணையத்தளங்களுக்கும் செயலிகளுக்கும் இட்டுச் செல்லும் மோசடிக் கும்பல்கள், அவர்களை ஏமாற்றி வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களைப் பெற்று, பணத்தைச் சுருட்டுகின்றன.

கடந்த 2023ஆம் ஆண்டில் 223 கியூஆர் குறியீட்டு மோசடிச் சம்பவங்கள் பதிவாகி 4.59 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது. 2024ல் அச்சம்பவங்களின் எண்ணிக்கை 655ஆக உயர்ந்து, 6.76 மில்லியன் ரிங்கிட் இழப்பு நேரிட்டது. சென்ற ஆண்டில் அந்த எண்ணிக்கை எட்டு மடங்கிற்குமேல் உயர்ந்து, 5,907ஆகப் பதிவானது; இழப்பும் 40.85 மில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்தது.

இவ்வாண்டு ஜனவரிமுதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அரங்கேறிய 5,134 சம்பவங்கள் வழியாக 28.67 மில்லியன் ரிங்கிட் பணம் பறிபோனது.

குறிப்பாக, மின்னிலக்கப் பரிவர்த்தனைகள் அதிகம் நடக்கும் சிலாங்கூர், ஜோகூர், கோலாலம்பூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் கியூஅர் குறியீட்டு மோசடிகள் பதிவாகியுள்ளன. கடந்த 2023 முதல் 2026 ஜூன் வரை அங்கு அரங்கேற்றப்பட்ட மொத்தம் 11,919 மோசடிச் சம்பவங்கள்மூலம் 80.86 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் போலிக் கணக்குகளை வைத்திருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திரு ருஸ்டி எச்சரித்துள்ளார்.

மேலும், கட்டணம் செலுத்துதல், கட்டணத்தைத் திரும்பப் பெறுதல், பரிசுகள், கணக்குச் சரிபார்ப்பு போன்ற காரணங்களைக் கூறி, முன்பின் தெரியாதவர்களிடமிருந்து வரும் கியூஆர் குறியீடுகளை வருடுமுன் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாகியூஆர் குறியீடுமோசடி