ஜோகூருக்குச் செல்லும் சிங்கப்பூரர்கள், செப்டம்பர் 22 (திங்கள்கிழமை) முதல் கடப்பிதழை பயன்படுத்தாமல் “கியுஆர்” முறையைப் பயன்படுத்தி சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்லலாம்.
அன்றை தினம், மலேசியா அதன் தேசிய ஒருங்கிணைந்த குடிநுழைவு முறையை (NIISe) சோதனை செய்யவிருக்கிறது.
“மைநைஸ்” (MyNIISE) என்று அழைக்கப்படும் அந்தச் செயலியை பதிவிறக்கிக் கொண்டு, விரைவுத் தகவல் (QR) குறியீடு என்ற “கியூஆர்” வருடும் முறையை மலேசியர்கள், சிங்கப்பூரர்கள் உள்பட 63 நாடுகளில் இருந்து வருவோர் பயன்படுத்தலாம்.
உட்லண்ட்ஸ், துவாஸ் ஆகிய இரண்டு நிலச் சோதனைச் சாவடிகளைக் கடந்து சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் செல்வோர் மலேசியாவின் சோதனைச் சாவடிகளில் அச்செயலியைப் பயன்படுத்தலாம்.
சோதனைகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 வரையில் நடைபெறும். கோலாலம்பூரின் 1ஆம் 2ஆம் முனையங்கள், பினாங்கு, கூச்சிங், கோத்தா கினபாலு ஆகிய மலேசியாவின் ஐந்து விமான நிலையங்களில் படிப்படியாக அச்செயல்முறை அறிமுகப்படுத்தப்படும்.
சிங்கப்பூருக்குள் வர அன்றாடம் 300,000 பேர் பயன்படுத்தும் ஜோகூர் மாநிலத்தின் இரு குடிநுழைவுச் சாவடிகளிலும் நெரிசலைக் குறைத்திட மைநைஸ் செயலி உதவும். குழுவாகச் செல்வோர் ஒரே குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
தற்போது மலேசியர்கள் மைபார்டர்பாஸ் (MyBorderPass) என்ற செயலியை பயன்படுத்துகின்றனர். அதன்படி, ஒருவர் மட்டுமே அச்செயலியைக் கொண்டு சாவடிகளைக் கடக்கமுடியும்.
ஆர்டிஎஸ் (RTS) எனும் ஜோகூர் பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் கட்டமைப்பு முழுமையாகச் செயல்படும்போது, இச்செயலி பயன்பாட்டில் இருக்கும் என்றும் அறியப்படுகிறது. ஒற்றைக் குடிநுழைவுத் திட்டத்தின்படி ரயில் பயணிகள், சிங்கப்பூரிலும் ஜோகூரிலும் உள்ள நிலையங்களை விட்டு வெளியேறும்போது இதே செயல்முறையை மேற்கொள்வர் என்று மலேசிய குடிநுழைவுத் துறையின் செயல்திட்டக்குழு விளக்கியது.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் அதன் இரு நிலச் சாவடிகளில் கியூஆர் வருடும் முறையை 2024 மார்ச் மாதத்தில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.