வாஷிங்டன்: இந்தியா வசமுள்ள காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பொறுப்பான இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களைத் தாமதம் இன்றி உடனடியாக நீதிக்கு முன் நிறுத்தவேண்டும் என்று அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவை அடங்கிய குவாட் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி நிகழ்ந்த தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து அணுவாயுதம் கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொண்டன. பஹல்காம் தாக்குதல் பற்றி குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில் பாகிஸ்தான் அல்லது இஸ்லாமாபாத் என்று குறிப்பிடப்படவில்லை.
“குவாட் அமைப்பு ஒருமனதாக அனைத்துவித பயங்கரவாத நடவடிக்கைகளையும் வன்முறைகளையும் கண்டிக்கிறது,”என்று அமைச்சர்களின் அறிக்கை சொன்னது.
தாக்குதல் நடத்தியோர்மீது தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்து உறுப்பினர்கள் அனைத்துத் தரப்பு அதிகாரிகளுடனும் ஒத்துழைக்கும்படி வெளியுறவு அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.
இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சண்டைநிறுத்தம் உறுதியானதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தமது ட்ருத் சோஷியலில் வெளியிட்டார். ஆனால் அமெரிக்காவின் தலையீட்டால் அது சாத்தியமாகவில்லை என்ற இந்தியா, வர்த்தக பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவுடன் துண்டிக்கப்போவதாக மிரட்டியது.
புதுடெல்லியும் இஸ்லாமாபாத்தும் தங்கள் பிரச்சினையை நேரடியாக பேசி தீர்க்கவேண்டும் என்றும் வெளிநாட்டுத் தலையீடுகள் இருக்கக்கூடாது என்றும் இந்தியா சொன்னது.
இதற்கிடையே, முக்கிய கனிமங்கள் தடையின்றி விநியோகம் செய்யப்பட அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவை ஜூலை 1ஆம் தேதி உறுதிகூறின.
அந்த நான்கு நாடுகளும் குவாட் முக்கிய கனிமத் திட்டத்தை அமைப்பதாகத் தெரிவித்தன. அதன்வழி விநியோகத் தொடர்களைப் பாதுகாக்கவும் பன்முகப்படுத்தவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
திட்டம் குறித்து ஒருசில விவரங்களை மட்டும் பகிர்ந்துகொண்ட அமைப்பு சீனா மீது சார்ந்திருக்கும் போக்கைக் குறைத்துக்கொள்வதே முக்கிய குறிக்கோள் என்றது.
ஏவுகணைகள் உற்பத்திக்காக ஜப்பான் சார்பில் வடகொரியாவைச் சாடிய குவாட் அமைப்பு, வடகொரியா அணுவாயுதத் திட்டத்தை முழுமையாகக் கைவிடும்படி எச்சரித்தது.

