போர்ப் பகுதியில் கால்வாசி பிள்ளைகள் வாழ்கின்றனர்: புள்ளிவிவரம்

போர்ப் பகுதியில் கால்வாசி பிள்ளைகள் வாழ்கின்றனர்: புள்ளிவிவரம்

படம்: ஏபி

20 Nov 2026 - 5:19 pm

2 mins read

அம்மான்: உலக அளவில் கிட்டத்தட்ட கால்வாசிப் பிள்ளைகள், போர் மூண்டுள்ள பகுதிகளில் வாழ்வதாக ‘சேவ் த சில்ட்ரன்’ (Save the Children) அறநிறுவன அமைப்பு தெரிவித்துள்ளது.

1990களிலிருந்து பதிவுசெய்யப்பட்டுவரும் புள்ளிவிவரங்களில் அதுவே ஆக அதிகம் என்று நவம்பர் 19ஆம் தேதி அமைப்பு குறிப்பிட்டது.

உலகில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பிள்ளை போர் பூமியில் வாழ்வதாக லண்டனை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு சொன்னது.

கடந்த பத்தாண்டுகளில் போர் பூமியில் வாழும் பிள்ளைகள் எண்ணிக்கை 50 விழுக்காட்டுக்கும் அதிகமாக அதிகரித்திருப்பதாக அது குறிப்பிட்டது.

2015ஆம் ஆண்டு 378 மில்லியனாக இருந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 589 மில்லியனாக உயர்ந்தது.

‘ஸ்டாப் த வார் ஆன் சில்ட்ரன்: சேஞ்சிங் த ஆட்ஸ்’ (Stop the War on Children: Changing the Odds) என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு, ஓஸ்லோவின் அமைதி ஆய்வுக் கழகத்திடமிருந்து புள்ளிவிவரங்களைப் பெற்றது.

போர் சூழந்த பகுதிகளில் வாழ்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 1990களின் நடுப்பகுதியில் 10 விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டு அது இரட்டிப்பாகி 23.4 விழுக்காடானது.

“மில்லியன்கணக்கான குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை, கல்வி, ஆரோக்கியம், எதிர்கால வாய்ப்புகள் ஆகியவற்றைப் போர்ச் சூழல் சீரழித்து வருவதை இந்த வரலாறு காணாத அதிகரிப்பு வெளிப்படுத்துகிறது,” என்றார் ஓஸ்லோ ஆய்வுக் கழகத்தின் பேராசிரியர் குட்ருன் ஆஸ்ட்பி.

மோதல் சூழல்களில் உள்ள குழந்தைகளைப் பாதுகாக்க இன்னும் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்படாவிட்டால், இன்றைய போர்களின் விளைவுகள் இன்னும் நீண்டகாலமாக உணரப்படும் என்று அவர் எச்சரித்தார்.

குறைந்தது ஓர் ஆயுதத் தாக்குதலாவது நடைபெற்ற இடத்தைச் சுற்றியுள்ள 50 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள பகுதிகளை ‘போர்ப் பகுதிகள்’ என அந்த அறிக்கை வரையறுக்கிறது.

போர்ப் பகுதிகளில் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆப்பிரிக்காவிலேயே அதிகமாக உள்ளது.

அங்குக் கிட்டத்தட்ட 260 மில்லியன் குழந்தைகள் உள்ளனர். அது உலகளாவிய மொத்த எண்ணிக்கையில் 44 விழுக்காடு என்று கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்