பேங்காக்கின் வீதி உணவுக் கடைகளில் அமர்ந்து உண்பதற்கு இடம் கிடைக்க பல மணி நேரம் வரிசைப் பிடித்து நிற்க வேண்டும். இப்போது சிலருக்கு அதுவே வேலையாகி விட்டது.
தாய்லாந்து இவ்வாண்டு அதன் கொவிட்-19 கட்டுப்பாடுகளைஅகற்றிய பின்னர், பேங்காக் வீதிக் கடைகளில் மீண்டும் கூட்டம் அலை மோதுகிறது.
பேங்காக்கில் உள்ள அரச மாளிகைக்கு அருகில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற ஜெய் ஃபாய் உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட விரும்புவர்கள் கட்டாயம் அதற்கு அரை நாளை ஒதுக்க வேண்டும். அங்கு இடம் கிடைக்க இரண்டு மணி நேரத்துக்கு மேல் பிடிக்கும்.
ஜெய் ஃபாய் என்று அழைக்கப்படும் அதன் 73 வயது உரிமையாளர் சுபின்யா ஜுன்சுதாவின் சமையலைச் சுவைக்க இன்னும் ஒரு மணி நேரமாவது காத்திருக்க வேண்டும்.
அங்கு கடந்த வாரம் சாப்பிடச் சென்ற 27 வயது சிங்கப்பூரர் ஜொஃப்ரி லீ, ஏழு மணி நேரம் காத்திருக்க நேரிட்டது.
ஆனால் அவ்வளவு நேரம் காத்திருக்க விரும்பாதவர்களுக்குக் கைகொடுத்து வருகின்றனர் தொழில் முறையாக வரிசைப் பிடிப்பவர்கள்.
தனிநபர்களுடன் நிறுவனங்களும் இச்சேவையை வழங்குகின்றன.
பேங்காங்கில் இவர்களுக்கான தேவை இப்போது அதிகம். முன்பெல்லாம் உள்ளூர்க்காரர்களுக்கு மட்டும் இவர்கள் பற்றி நன்கு தெரியும்.
இப்போதோ அவர்கள் பற்றி வெளிநாட்டவரும் தெரிந்துகொண்டு விட்டனர்.
சுமார் 700 பாட் (S$27) செலுத்தினால் அவர்கள் வாடிக்கையாளர்களுக்காக வரிசைகளில் நிற்பார்கள். அதற்காக, இவர்கள் ஆராய்ச்சியும் செய்வதுண்டு.
வாடிக்கையாளர்கள் வரிசை பிடித்துக் காத்திருக்க ஏற்படுத்தி இருக்கும் முறையை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வரிசைப் பிடிக்கும் திட்டமிடுகின்றனர்.
தங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண விரும்பும் நேரத்துக்கு ஏற்ப துல்லியமாக நேரத்தைக் கணக்கிடுகிறார்கள்.
இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கு வெளியே காத்திருக்க விரும்பாதவர்களுக்கும் இச்சேவையை அவர்கள் வழங்குகின்றனர்.

