மலேசியரான ஆர் லிங்கேஸ்வரனுக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றம்

மலேசியரான ஆர் லிங்கேஸ்வரனுக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றம்

2 mins read
f9c40b73-b1bf-4855-9855-eab7f971e480
லிங்கேஸ்வரனின் மேல்முறையீடு, 2019 மார்ச் 27ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.  - படம்: மக்கள் ஓசை

கோலாலம்பூர்: சிங்கப்பூருக்கு 2018ஆம் ஆண்டில் 52.77 கிராம் டயமோர்ஃபினை கடத்தியதற்காக புதன்கிழமை (பிப்ரவரி 11) அன்று, ஆர் லிங்கேஸ்வரனுக்கு அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

2025 செப்டம்பரில் கே தட்சிணாமூர்த்தி, 2025 அக்டோபரில் பி பன்னிர் செல்வம் ஆகியோரைத் தொடர்ந்து, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்ட மூன்றாவது மலேசியர் இவர்.

மற்றொரு மலேசியக் கைதியான எஸ் சாமிநாதன் சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றத்துக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

33 வயதான லிங்கேஸ்வரன், “சட்டத்தின்கீழ் முழு முறையான நடைமுறைக்கு உட்பட்டவர். மேலும் அவரது விசாரணை மற்றும் மேல்முறையீட்டின்போது அவரைச் சட்ட ஆலோசகர் ஒருவர் பிரதிநிதித்தார்,” என்று சிங்கப்பூர் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஓர் அறிக்கையில் கூறி, மரண தண்டனையை உறுதிப்படுத்தியது.

போதைப் புழங்கிகள், குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் கணிசமான அளவு போதைப்பொருள் கடத்தல் உட்பட மிகக் கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று அது கூறியது.

போதைப்பொருள் கடத்தலுக்காக அக்டோபர் 15, 2018 அன்று குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு லிங்கேஸ்வரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மேல்முறையீடு, 2019, மார்ச் 27ஆம் தேதி அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மேலும், சிங்கப்பூர் அதிபரிடம் அவர் தாக்கல் செய்த இரண்டு கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

சிங்கப்பூர் சிறைச்சாலைத் துறை அதிகாரிகளின் தவறான நடத்தை குறித்து குற்றம் சாட்டி, மரணதண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி, லிங்கேஸ்வரனின் வழக்கறிஞர்கள் சிவில் வழக்குத் தொடர்ந்தனர். இருப்பினும், எந்தத் தடையும் வழங்கப்படவில்லை. அதனால், மரணதண்டனை உத்தரவு உறுதிப்படுத்தப்பட்டது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்