துபாய்: யூத சமயகுருவான சிவி கோகனைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் மூவரை ஐக்கிய அரபு சிற்றரசு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டது குறித்து ஐக்கிய அரபு சிற்றரசுகளின் உள்துறை அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 24) அறிவித்தது.
சந்தேக நபர்கள் பற்றி அதிகாரிகள் கூடுதல் தகவல் வெளியிடவில்லை.
நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் செயல்களுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு உறுதி அளித்தது.
கோகன், மோல்டோவா கடப்பதிழைப் பயன்படுத்தி ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்குள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர் ஐக்கிய அரபு சிற்றரசுகளில் வசித்து வந்ததாக அதிகாரிகள் கூறினர்.
அவர் இஸ்ரேல், மோல்டோவா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமை பெற்றவர் என்று அறியப்படுகிறது.
இதற்கிடையே, யூத சமயகுரு கொலை செய்யப்பட்டது யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல் என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் இஸ்ரேல் செய்யும் என அவர் சூளுரைத்தார்.
கோகன், ஐக்கிய அரபு சிற்றரசுகளில் உள்ள பாரம்பரிய யூத அமைப்பு ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இந்த அமைப்பு, ஐக்கிய அரபு சிற்றரசுகளில் வசிக்கும், அங்கு பயணம் மேற்கொள்ளும் யூதர்களுக்கு ஆதரவு வழங்குகிறது.
கோகன் யூதர்களுக்கான கடை ஒன்றை நிர்வகித்து வந்தார்.
இந்நிலையில், அவர் நவம்பர் 21ஆம் தேதி துபாயில் மாயமானார்.
அவரது உடல் நவம்பர் 24ஆம் தேதி ஒமானிய எல்லை அருகில் உள்ள அல் அயின் நகரில் கண்டெடுக்கப்பட்டது.
அவர் எங்கு கொலை செய்யப்பட்டார் என்பது இன்னும் தெரியவில்லை என இஸ்ரேலிய அரசியல்வாதி அயூப் காரா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
கோகனின் கொலைக்கு ஈரான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும், ஐக்கிய அரபு சிற்றரசுகள் நடத்தும் விசாரணையின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாக அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து ஈரான் கருத்து தெரிவிக்கவில்லை.
விசாரணை நிறைவடைந்ததும் கோகனின் உடல் இஸ்ரேலுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று காரா தெரிவித்தார்.
கோகனின் உடல் இஸ்ரேலில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி இஸ்ரேலியர்களிடம் இஸ்ரேலிய அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.