கோலாலம்பூர்: மலேசியாவின் கெஅடிலான் ராக்யாட் கட்சியின் அடுத்த துணைத்தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்டுத் தோற்ற ரஃபிசி ரம்லி தமக்கு இந்தத் தோல்வி ஆறுதல் தருவதாகத் தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளுக்கு பிகேஆர் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பில் இருந்த திரு ரஃபிசி இனி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறினார்.
“உண்மையில் தோல்வி என்னை பாதிக்கவில்லை, மகிழ்ச்சியைத்தான் கொடுத்துள்ளது,” என்றார் திரு ரஃபிசி
பன்டானுக்கு நாடாளுமன்ற உறுப்பினரான 47 வயது ரஃபிசி 27 ஆண்டுகளாக அரசியலில் உள்ளார்.
அவர் தனது அரசியல் வாழ்க்கையில் பல வழக்குகள், நிதி ஊழலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது, அன்வார் இப்ராகிமுக்காக தனது வேலையைவிட்டது எனப் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
தமக்கு ஆறுதல் கொடுத்த அனைவருக்கும் ரஃபிசி நன்றி தெரிவித்தார்.
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் போட்டியில் பிரதமர் அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் இஸா வெற்றிபெற்றார். இந்த உட்கட்சித் தேர்தல் மே 23ஆம் தேதி நடந்தது.