ஜார்ஜ் டவுன்: பினாங்கில் நடத்தப்பட்ட இரண்டு திடீர் சோதனை நடவடிக்கைகளில், மூன்று மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதோடு, உள்ளூர் போதைப்பொருள் கும்பல் ஒன்றைச் சேர்ந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் பெண்கள் இருவர் அடங்குவர்.
ஜார்ஜ் டவுனிலும் பட்டர்வொர்த்திலும் உள்ள ஐந்து வீடுகளில் டிசம்பர் 6ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அரசாங்கக் காவல்துறைத் துணைத் தலைவர் முகம்மது ஆல்வி ஸைனல் அபிடின் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.
கைதுசெய்யப்பட்ட அறுவர் 26க்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றார் அவர்.
சோதனை நடவடிக்கைகளில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களில் 9,822 கிராம் ‘கெட்டமின்’ 17,050 எரிமின் 5 மாத்திரைகள், 1,503 கிராம் ‘எக்ஸ்டசி’ மாத்திரைகள் உள்ளிட்டவை அடங்கும். அந்தப் போதைப்பொருள்களின் மதிப்பு 1.34 மில்லியன் ரிங்கிட்.
கூடுதல் விசாரணைக்குப் பிறகு, டிசம்பர் 13ஆம் தேதி சுங்கை நிபோங்கில் உள்ள சொகுசுக் கூட்டுரிமை வீட்டில் மற்றொரு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக திரு ஆல்வி கூறினார்.
அதில் 1.639 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
“இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து அந்தப் போதைப்பொருள் கும்பல் செயல்பட்டு வந்ததை விசாரணைகள் காட்டின. அது, உள்ளூர் சந்தைகளில் விற்பதற்காக அனைத்துலகப் போதைப்பொருள் கும்பலிடமிருந்து போதைப்பொருள்களைப் பெற்றது,” என்று திரு ஆல்வி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
அறுவர் கைதுசெய்யப்பட்டதோடு, காவல்துறையினர் 755,500 ரிங்கிட் மதிப்பிலான ஒன்பது வாகனங்கள், 26,085 ரிங்கிட் ரொக்கம், 800 ரிங்கிட் மதிப்பிலான நகைகள் உள்ளிட்டவற்றையும் கைப்பற்றினர்.
விசாரணையில் உதவ, ஆறு பேரும் டிசம்பர் 20ஆம் தேதிவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.