தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிள்ளான் படகுத்துறையில் சோதனை; 50,000 லிட்டர் டீசல் பறிமுதல்

1 mins read
559dcbfa-708c-4356-8e97-a9504fbf3321
திடீர் சோதனை நடவடிக்கையில், கப்பல் ஒன்றும் 50,000 லிட்டர் டீசலும் கைப்பற்றப்பட்டன. - படம்: த ஸ்டார்

கிள்ளான்: மலேசியாவின் கிள்ளான் படகுத்துறை ஒன்றில் அதிகாலையில் உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சு மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில், கப்பல் ஒன்றும் 50,000 லிட்டர் டீசலும் கைப்பற்றப்பட்டன.

‘பாகான் ஹைலாம்’ அணைக்கரையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) பேசிய அமலாக்கத் துறை இயக்குநர் அஸ்மான் ஆதாம், சோதனை நடவடிக்கை முந்திய நாள் அதிகாலை 3 மணிக்கு நடந்ததாகக் கூறினார்.

சந்தேகத்துக்குரிய டீசல் கடத்தல் தொடர்பில் இரண்டு மாதங்களாகக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சோதனை நடவடிக்கை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“சோதனை நடவடிக்கைக் குழுவினர் ஐந்து ஆடவர்களைக் கைது செய்தனர். அவர்களில் நால்வர் வெளிநாட்டவர். விசாரணையில் உதவ, அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

“கப்பலைச் சோதித்தபோது, உள்ளூர் ஆடவர் ஒருவர் முன்வந்து, தான் கப்பல் உரிமையாளர் என்று கூறினார். இருப்பினும், டீசல் வர்த்தகம் தொடர்பான எந்தவோர் ஆவணமோ உரிமமோ அவரிடம் இல்லை,” என்று திரு அஸ்மான் சொன்னார்.

டீசல், கப்பலிலும் அணைக்கரையைச் சுற்றியிருந்த விநியோக டாங்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார். கைப்பற்றப்பட்ட டீசலின் மதிப்பு 900,000 ரிங்கிட் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

“சந்தேகப் பேர்வழிகள் இரவு நேரத்தில் தங்களின் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று நம்பப்படுகிறது. எரிபொருள் எங்குச் செல்லவேண்டியிருந்தது, அது எங்கிருந்து வந்தது என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்,” என்றார் திரு அஸ்மான்.

குறிப்புச் சொற்கள்