கிள்ளான் துறைமுகத்தில் 2.15 மி. ரிங்கிட் மதிப்பிலான மின்கழிவுகள் பறிமுதல்

கிள்ளான் துறைமுகத்தில் 2.15 மி. ரிங்கிட் மதிப்பிலான மின்கழிவுகள் பறிமுதல்

1 mins read
73bf3854-21ff-45da-8356-c52f511725d8
இந்த மின்கழிவுகளின் மொத்த மதிப்பு 2,154,200 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது. - படம்: மக்கள் ஓசை

கோலாலம்பூர்: மலேசியாவிற்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற சுமார் 2.15 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மின்கழிவுகளைச் சுங்கத்துறையினர் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியுள்ளனர். வடதுறைமுகத்தில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் எட்டு கொள்கலன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாகாங் மாநிலச் சுங்கத்துறை அமலாக்கப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து பாகாங் சுங்கத்துறை இயக்குநர் முகமது அஸ்ரி செமான் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

“சுமார் 40 அடி நீளம் கொண்ட எட்டு கொள்கலன்கள் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டன. இந்த மின்கழிவுகள் ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட கொள்கலன்களில் ஐந்து கனடாவிலிருந்தும், இரண்டு ஸ்பெயினிலிருந்தும் மற்றும் ஒன்று குரோவேஷியாவிலிருந்தும் கொண்டு வரப்பட்டவை,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த மின்கழிவுகளின் மொத்த மதிப்பு 2,154,200 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முறையான அனுமதியின்றி மின்கழிவுகளை நாட்டிற்குள் கொண்டு வருவது சுற்றுச்சூழலுக்கும் பொதுச் சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். சட்டவிரோதக் கழிவு இறக்குமதியைத் தடுக்க எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

தற்போது இந்தப் பறிமுதல் தொடர்பாகக் கூடுதல் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்