பேங்காக்: மியன்மாரின் சில பகுதிகளில் வாரயிறுதி நாள்களில் மழை பெய்ததை அடுத்து, நிவாரணப் பணிகள் பாதிக்கப்படக்கூடும் என்று நிவாரண உதவி வழங்கும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
நோய்ப் பரவல் ஏற்படக்கூடும் என்றும் அவை கூறியுள்ளன.
வீடுகளை இழந்து தவிப்போரைத் தங்கவைக்க அதிக எண்ணிக்கையில் கூடாரங்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாட்டு நிறுவன உதவிக் குழுவின் தலைவர் டாம் ஃபிளெட்சர் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டார்.
மார்ச் 28ஆம் தேதி மியன்மாரை உலுக்கிய கடுமையான நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 3,471ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 4,671 பேர் காயமடைந்தனர் என்றும் இன்னும் 214 பேரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டது.
பருவம் தப்பிய மழை, மிக அதிக வெப்பம் இரண்டாலும் காலரா போன்ற நோய்கள் பரவக்கூடும் என்று நிவாரண உதவி அமைப்புகள் எச்சரித்துள்ளன.
பாதிக்கப்பட்டோரில் பலர் வெட்டவெளியில் தங்கியிருப்பதை அவர்கள் சுட்டினர்.
நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்த பலரும் இடிந்துவிழுந்த தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே உறங்குவது அச்சமளிப்பதாகக் கூறிய திரு டாம் ஃபிளெட்சர், கூடுமானவரை அதிகமானோரைக் காப்பாற்ற வலுவான, ஒருங்கிணைந்த நடவடிக்கை முக்கியம் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இந்த நிலநடுக்கத்தால் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் கட்டட இடிபாடுகளிலிருந்து மூவரின் உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) தெரிவித்துள்ளனர்.
அரசாங்கக் கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் அந்த 30 மாடிக் கட்டடத்தின் இடிபாடுகளில் பாதிக்கப்பட்டோரைத் தேடி மீட்கும் பணி பத்தாவது நாளாகத் தொடர்கிறது. தூர்வாரும் இயந்திரங்களுடன் மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி பேங்காக்கில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்திருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன.
இடிபாடுகளில் சிக்கிய மேலும் 78 பேரை மீட்கும் பணிகள் அங்கு தொடர்கின்றன.