கொழும்பு: இலங்கையில் பெய்த பெருமழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு இடையூறாய் அமைந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) பெய்த பலத்த மழையால் சுத்தம் செய்யும் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. இதற்கு முன்னர் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி ஏறக்குறைய 500 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாழக்கிழமை இரவு நேர நிலவரப்படி, 15 மணி நேரத்தில் 132 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்ததாக அதிகாரிகள் கூறினர்.
இருப்பினும் சென்ற வாரம் புரண்டோடிய பெருவெள்ளம் சற்று வடியத் தொடங்கியிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இன்னும் 340க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று பேரிடர் நிர்வாக நிலையம் சொன்னது.
அரசாங்கத்தின் தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்தோரின் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. சென்ற வாரம் 225,000 பேர் அங்கு அடைக்கலம் நாடியிருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை 170,000க்குக் குறைந்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் இதுவே ஆக மோசமான வெள்ளம் என்று அதிபர் அனுர குமார திசநாயக்க தெரிவித்தார்.
இதற்கிடையே, மலைப்பாங்கான பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் உடனே வீடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு வீட்டைச் சுத்தம் செய்ய 25,000 இலங்கை ரூபாய் ($105) செலவாவதாகக் கூறப்பட்டது. சேதமடைந்த வீடுகளின் மறுநிர்மாணத்திற்கு 6 அல்லது 7 பில்லியன் அமெரிக்க டாலராகக்கூடும் ($7.8 அல்லது 9.07 பில்லியன்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் தடைபட்ட மின்விநியோகத்தில் கிட்டத்தட்ட முக்கால்வாசி வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டது.
இருப்பினும் மத்திய வட்டாரத்தின் சில பகுதிகளில் மின்விநியோக, தொலைபேசிச் சேவைகள் இன்னமும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதிபர் திசநாயக்க, சனிக்கிழமை நாட்டில் நெருக்கடி நிலை நடப்பில் இருக்கும் என்று அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகள், அனைத்துலக ஆதரவுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்றும் அவர் உறுதிகூறினார்.
இந்நிலையில் பருவநிலையால் ஏற்பட்ட பேரிடர், இலங்கையின் சுற்றுலாத் துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. சிலர் வீடுகளை வாடகைக்கு விட்டு அதிலிருந்து ஓரிரவுக்கு ஏறக்குறைய $40 பணம் ஈட்டி வந்தனர். இப்போது அவர்கள், அடுத்த மாதம் வரையிலான முன்பதிவுகளை ரத்துச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் 2022ஆம் ஆண்டு பொருளியல் நெருக்கடி உச்சத்தில் இருந்தது. இப்போதுதான் நாடு அதிலிருந்து மீண்டுவரத் தொடங்கியது. இந்நிலையில் தற்போதைய கடும் மழையும் வெள்ளமும் இலங்கையின் முன்னேற்றத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையின் 22 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினரை அவை பாதித்துள்ளன.

