பிலிப்பீன்சின் நிலநடுக்க பாதிப்பை மேலும் மோசமாக்கிய மழை

பிலிப்பீன்சின் நிலநடுக்க பாதிப்பை மேலும் மோசமாக்கிய மழை

படம்: ராய்ட்டர்ஸ்

12 Jun 2026 - 2:54 pm

2 mins read

மணிலா: தெற்கு பிலிப்பீன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆகக் கூடியள்ளது.

வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மழையையும் நிலநடுக்கத்திற்குப் பிந்திய அதிர்வுகளையும் எதிர்கொண்ட மீட்புப் படையினர், காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஜூன் 8ல் மிண்டானோ கடற்கரைக்கு அருகே ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஃபிலிப்பீன்சின் தெற்குத் தீவில் உள்ள கட்டடங்களை இடித்துத் தரைமட்டமாக்கியதுடன் நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியது. அதேவேளையில் அப்பகுதி முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.

உள்ளூர் அதிகார வரம்புகளிலிருந்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளதால், ஜூன் 12ல் வெளியிடப்பட்ட அரசாங்கப் புள்ளிவிவரத்தில் மேலும் எட்டு உயிரிழப்புகள் உறுதியாகியுள்ளன. அதேநேரத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்தது.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட சரங்கனி மாநிலத்தில், சேதமடைந்திருந்த சாலைகள் பல சீரமைக்கப்பட்டுவிட்டதாக மாநிலப் பேரிடர் துறைத் தலைவர் ரெனே புன்சலான் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

எனினும், மின்சாரம் இல்லாமல் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்கும் குடியிருப்பாளர்களுக்கு உணவும் தண்ணீரும் கொண்டுசெல்ல ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பெரிய பாறைகளை அகற்ற மண்வாரி இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது குறித்துப் பேசிய அவர், “அதிர்வுகள் இன்னும் எங்கள் பணிகளைத் தாமதப்படுத்துகின்றன. அதோடு நேற்றிரவு மழையும் பெய்ததால், நாங்கள் சிறிது நேரம் நடவடிக்கையை நிறுத்த வேண்டி சூழல்,” என்று கூறினார்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்தாலும், அவர்களை உயிருடன் மீட்பதற்கான நம்பிக்கை மிகக் குறைவாகவே உள்ளது என்று புன்சலான் மேலும் தெரிவித்தார்.

“நிலநடுக்கம் ஏற்பட்டு பல நாள்கள் ஆகிவிட்டன. எனவே அவர்களில் யாரையாவது உயிருடன் மீட்டெடுக்க முடிந்தால் அது அதிசயமாக இருக்கும். அவர்களது உடல்களை மீட்பது மட்டுமே தற்போது எங்களின் இலக்கு,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்