கோலாலம்பூர்: தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதியன்று மலேசியாவின் ஏழு மாநிலங்களில் நடைபெற்ற மழைநீர்க் கொண்டாட்ட விழாவில் ஏறத்தாழ 500,000 சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டதன்மூலம் அரசாங்கத்திற்கு $100 மில்லியன் (மலேசிய ரிங்கிட் 320 மில்லியன்) வருவாய் கிட்டியது.
இதனை மலேசியச் சுற்றுலாத் துறை அமைச்சர் தியோங் கிங் சிங் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலேசியாவின் பழைமைவாத அரசியல்வாதிகள் அதிக அளவில் எதிர்மறைக் கருத்துகளை அவ்விழா குறித்து வெளியிட்டிருந்த நிலையில் சுற்றுலாத் துறை அமைச்சர் அதன் வெற்றி குறித்து விவரித்தார்.
நெகிரி செம்பிலான், திரங்கானு, ஜோகூர், மலாக்கா, கெடா, பாகாங் ஆகிய ஆறு மாநிலங்களுடன் கூட்டரசுப் பிரதேசப் பகுதியான போர்னியோவில் உள்ள லபுவான் என்ற நகரிலும் அந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
குறிப்பாக, ஆறு மாநிலங்களின் சுற்றுலா வருவாய் மட்டும் $22 மில்லியனையும் (மலேசிய ரிங்கிட் 71 மில்லியன்) கடந்தது என்று அமைச்சர் தியோங் கூறினார்.
மலேசியப் பொருளியலுக்கு மொத்தமாக $100 மில்லியன் வருவாயை விழா வழங்கியுள்ளது என்று அவர் அமைச்சர்களின் கேள்வி பதில் நேரத்தில் குறிப்பிட்டார்.
“உள்நாட்டு சுற்றுலாத் துறை அமைப்பினரிடம் இருந்து நேர்மறையான கருத்துகள் கிடைத்துள்ளன. மேலும் அவர்கள் விழாவை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.
விசிட் மலேசியா 2026
மலேசியாவுக்கு சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் ஆண்டாக 2026 அடையாளம் காணப்பட்டுள்ளது. ‘விசிட் மலேசியா 2026’ என்ற விளம்பரத் திட்டத்தின் முக்கிய அங்கமாக சாலைகள்தோறும் கொண்டாடப்படும் அந்த மழைநீர் விழா இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

