நெகிரி செம்பிலான் அரசப் பட்டங்களை இழந்த ரயிஸ் யாத்திம்

நெகிரி செம்பிலான் அரசப் பட்டங்களை இழந்த ரயிஸ் யாத்திம்

2 mins read
அரண்மனை நெருக்கடியில் ஈடுபட்டதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
45de9f6c-4251-4bc0-a731-5a91300a7d5e
எதிர்க்கட்சியான பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் ஒரு கட்சித் தலைவரான ரயிஸ் யாத்திமின் அரச பட்டங்களை நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் முஹ்ரிஸ் முனாவிர் ஜூலை 30ஆம் தேதி ரத்து செய்தார். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் முஹ்ரிஸ் முனாவீர், மாநிலத் தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக, மூத்த எதிர்க்கட்சித் தலைவரான ரயிஸ் யாத்திமின் அரசப் பட்டங்களைப் பறித்துள்ளார். முஹ்ரிசின் உறவினரை புதிய மன்னராக ரயிஸ் யாத்திம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலுக்கு வழிவகுத்த அரண்மனை நெருக்கடியின்போது, ​​’உண்டாங்’ என்று அழைக்கப்படும் மாவட்டத் தலைவர்களுக்கு திரு ரயிஸ், ரகசியமாக சட்ட ஆலோசகராக இருந்து வந்தார் என்ற தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த அரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயிசின் இரண்டு அரசப் பட்டங்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டன என்று மாநிலச் செயலாளர் ஜாஃபிர் இப்ராஹிம் ஜூலை 30ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். “நெகிரி செம்பிலானின் அரச மன்றத்தின் மகத்துவம், புனிதம், கண்ணியத்தைக் கட்டிக்காப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது,” என்றும் அவர் மேலும் கூறினார்.

இன ரீதியாக பதற்றம் நிறைந்த ஒரு மாநிலத் தேர்தலுக்கு மத்தியில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில், 1978 முதல் 1982ஆம் ஆண்டு வரை நெகிரி செம்பிலான் முதலமைச்சராகப் பணியாற்றிய 84 வயதான ரயிஸ், தற்போது எதிர்க்கட்சியான பெரிக்கத்தான் நேஷனல் (பிஎன்) கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள ஒரு கட்சிக்குத் தலைமை தாங்குகிறார்.

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அரியணைக்கு எதிராக ரயிஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் விளைவாகவே நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் முஹ்ரிஸ் முனாவீர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார் என்று அரண்மனைக்கு நெருக்கமான வட்டாரங்கள் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழிடம் தெரிவித்தன.

நெகிரி செம்பிலானின் தனித்துவமான சட்டத்தில் நிபுணராகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் ரயிஸ், ஏப்ரல் மாதம் தொடங்கிய தற்போதைய அரண்மனை நெருக்கடி முழுவதும் உண்டாங்கிற்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, பிரதமர் அன்வார் இப்ராகிமின் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவரும், மாநில முதலமைச்சருமான அமினுதீன் ஹரூன், தமது நிர்வாகம் முஹ்ரிசை சட்டபூர்வமான ஆட்சியாளராக இன்னும் அங்கீகரிப்பதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
நெருக்கடிஆலோசகர்பட்டங்கள்