ஊழல் வழக்கில் ராஜபக்சே மகன் கைது

ஊழல் வழக்கில் ராஜபக்சே மகன் கைது

1 mins read
22870266-bebc-40ff-b172-0380fef3c77b
கைதுசெய்யப்பட்ட நாமல் ராஜபக்சேவைச் செப்டம்பர் 18ஆம் தேதிவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே ஊழல் வழக்கில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) கைதுசெய்யப்பட்டார்.

நாமலை செப்டம்பர் 18ஆம் தேதிவரை காவலில் வைக்கும்படி கொழும்புத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். அதனையடுத்து, அவர் கொழும்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இலங்கை தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக வழக்குப் பதிவாகியுள்ளது.

அதன் தொடர்பில், எதிர்க்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சேவிடம் இலங்கை ஊழல் தடுப்பு அமைப்பு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, அவர் கைதுசெய்யப்பட்டார்.

கடந்த 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ்ஸிடம் இருந்து விமானங்கள் வாங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. விமானங்களை வாங்க 100 மில்லியன் இலங்கை ரூபாய் (S$386,300) லஞ்சமாகக் கைமாறியதாகச் சொல்லப்படுகிறது.

அது தொடர்பான விசாரணைக்கு உதவ ஏர்பஸ் குழு ஒன்று ஆகஸ்ட் மாதம் கொழும்பு சென்றிருந்தது.

வழக்கறிஞரான நாமல் தன் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறார்.

குறிப்புச் சொற்கள்