ராஜீவ் காந்தி படுகொலை வழக்கிலிருந்து விடுதலையானவர் வழக்கறிஞர் ஆனார்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கிலிருந்து விடுதலையானவர் வழக்கறிஞர் ஆனார்

சிறையில் இருந்தபோதே பல கல்வித் தேர்ச்சிகளைப் பெற்றார் பேரறிவாளன்
படம்: த ஹிந்து

28 Apr 2026 - 12:23 pm

1 mins read

சென்னை: முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று, பிறகு கடந்த 2022ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஏ.ஜி. பேரறிவாளன் வழக்கறிஞராகத் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) பதிவுசெய்துள்ளார்.

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்டு, அவர் இனி வழக்கறிஞராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றலாம்.

கடந்த 2022ஆம் ஆண்டு மே 18 அன்று, இந்திய உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்துத் தீர்ப்பளித்தது.

விடுவிக்கப்படுமுன் அவர் சிறையில் இருந்த 30 ஆண்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டது. அதற்கு முன்னதாக, மரண தண்டனை குறைக்கப்பட்டு அவர்மீது சுமத்தப்பட்ட பயங்கரவாதக் குற்றச்சாட்டும் மீட்டுக்கொள்ளப்பட்டது.

சிறையிலிருந்து விடுதலையானபின் பேரறிவாளன், கர்நாடக மாநிலம், பெங்களூரில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயின்றார். கடந்த 2025ஆம் ஆண்டில் அங்கும் அதே ஆண்டில் அனைத்திந்திய வழக்கறிஞர் சங்கத் தேர்விலும் அவர் தேர்ச்சி பெற்றார்.

தமது நீண்டகாலச் சிறைத்தண்டனையை எதிர்த்துத் தாம் மேற்கொண்ட சட்டப் போராட்டம், அத்துறையில் தேர்ச்சி பெற ஆர்வம் ஊட்டியது என்று திரு பேரறிவாளன் குறிப்பிட்டார்.

மனித உரிமை சார்ந்த வழக்குகளிலும் மரண தண்டனைக்கு எதிராகவும் தமது சட்டத்துறைப் பயணம் இருக்கும் என்று அவர் கூறினார்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் நடத்திய தேர்வுகளில் சிறையில் இருந்தபோதே அவர் சிறப்புத் தேர்ச்சி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்