மத்திய கிழக்குப் பூசலால் தென்கிழக்காசியாவில் ரமலான் உணவு பாதிப்பு

மத்திய கிழக்குப் பூசலால் தென்கிழக்காசியாவில் ரமலான் உணவு பாதிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

15 Mar 2026 - 5:26 pm

2 mins read

ஜகார்த்தா: தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய ஒட்டுமொத்த விற்பனை மையமான, ஜகார்த்தா நகரில் இருக்கும் தானா அபாங் சந்தையில் ஈரான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களும் பிஸ்தா பருப்புகளும் விற்கப்பட்டு வருகின்றன.

அவற்றை வாங்க வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதுவதுண்டு. ஆனால், இப்போதோ அந்தச் சந்தையில் நோன்புப் பெருநாள் (ரமலான்) காலத்தில் மிகவும் பிரபலமாக விற்கப்படும் இந்த உணவுப் பொருள்களின் வரத்து குறைந்து வருவதோடு விலையும் அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்குப் பூசலால் அவ்வட்டார வர்த்தகப் பாதைகளின்வழி பொருள்கள் வந்தடைவது பாதிக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

சில பேரீச்சம்பழங்கள், பிஸ்தா பருப்பு வகைகளின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக அச்சந்தை விற்பனையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, ‘பாம் டேட்ஸ’ எனும் பேரீச்சம்பழ வகையின் விலை கடந்த சில வாரங்களில் கிலோவுக்கு 80,000 ரூப்பியாவிலிருந்து (ஆறு வெள்ளி) 120,000 ரூப்பியாவுக்கு அதிகரித்துள்ளது.

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ வழங்கும் இலவச உணவுத் திட்டத்தில், நோன்பு துறக்கும்போது கட்டுப்படியான விலையில் பேரீச்சம்பழங்கள் கிடைப்பது அவசியமாக இருப்பதும் அவற்றின் விலை உயர்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் நோன்பு துறப்பதில் பேரீச்சம்பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நபிகள் நாயகத்தின் பாரம்பரிய வழியில் இந்தப் பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.

நோன்பு துறக்கும்போது பேரீச்சம் பழங்கள் உட்கொள்வதை இந்தோனீசியர்கள் பலகாலமாகப் பின்பற்றி வருகின்றனர்.

இந்தோனீசியாவில் ரமலான் மாதத்தின்போது பேரீச்சம்பழங்கள் 50 விழுக்காடு வரை கூடுதலாக உட்கொள்ளப்படுகின்றன என்று அந்நாட்டின் வேளாண் அமைச்சின் இயக்குநரான குந்தோரோ போகா அண்ட்ரி தெரிவித்தார். பேரீச்சம்பழங்கள் பொதுவாக மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா போன்ற வட்டாரங்களில் ஈரப்பசை அதிகம் இல்லாத காய்ந்த, பாலைவனச் சூழலில்தான் நன்கு விளையும்.

மத்திய கிழக்கு வட்டாரத்தையும் அரபிக் கடல் மற்றும் அதையும் தாண்டிய பகுதிகளையும் இணைக்கும் கடல்துறை வர்த்தகப் பாதை ஹோர்முஸ் நீரிணை. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து அப்பகுதியில் வர்த்தகத்துக்குப் பெரிய அளவில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்
உலகம்இந்தோனீசியாஉணவுமத்திய கிழக்கு