சிலாங்கூர்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் மார்ச் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திடீரென ஆலங்கட்டி மழை பெய்தபோது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மலேசியாவின் ‘சினார் ஹரியான்’ தெரிவித்ததன்படி, இந்த வழக்கத்திற்கு மாறான வானிலை மாலை சுமார் 4 மணியளவில் ஏற்பட்டதாக சிலாங்கூரின் பல்வேறு பகுதிகளில் உள்ளோர் கூறினர்.
வெப்பமண்டலப் பகுதிகளில் ஆலங்கட்டி நிகழ்வது அரிதான ஓர் நிகழ்வாகும்.
இந்நிலையில், இதுவரை அதிகம் கண்டிராத தருணத்தை சிலாங்கூர் மக்கள் பலரும் காணொளியும் படமும் எடுத்து தங்களின் சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து வருவதாக ஊடகம் தெரிவித்தது.
“முதல்முறையாக நேரடியாக இதைக் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று குளிர்கால உடைகளை அணிந்துகொள்ளலாம்,” என்று காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்த அஸ்மி ரடார் சஹாம் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.
கண்ணுக்கு நன்கு புலப்படும் வகையில் அமைந்திருந்த அந்தக் கட்டிகள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட கட்டைவிரல் அளவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, வேறு சில பகுதிகளில் கனமழையால் சேதமும் ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன் போக்குவரத்தும் மெதுவடைந்துள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்தது.