‘சிஸ்டர்ஸ்’ தீவுகளில் பிறந்த அரியவகைக் கடல் ஆமைக் குஞ்சுகள்

‘சிஸ்டர்ஸ்’ தீவுகளில் பிறந்த அரியவகைக் கடல் ஆமைக் குஞ்சுகள்

2 mins read
b6b0b406-5b4c-4843-b414-32dc4cbe5040
சிஸ்டர்ஸ் தீவில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14), 42 அரியவகை ஹாக்ஸ்பில் கடல் ஆமைகள் கடலுக்குள் விடப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரின் ‘சிஸ்டர்ஸ்’ இரட்டைத் தீவில் பிறந்த 42 அரிய வகைக் கடல் ஆமைகள் வியாழக்கிழமையும் (ஆகஸ்ட் 13) வெள்ளிக்கிழமையும் அங்குள்ள கடலுக்குள் அதிகாரிகளால் விடப்பட்டன.

ஜூன் மாதம் அத்தீவின் கடற்கரைக்கு மிக அருகில் தாய் ஆமை ஒன்று அதன் 97 முட்டைகளை இட்டது.

கடல்நீர் மட்டம் உயர்ந்தால் அவை மூழ்கிவிடும் அபாயம் அப்போது இருந்தது.

ஆறு வாரங்கள் கடந்து, அந்த முட்டைகள் சிறிது வளர்ச்சியடைந்ததும் அவற்றை ஆபத்திலிருந்து காக்கும் நோக்கத்துடன் தேசியப் பூங்காக் கழக அதிகாரிகள் அவற்றைக் கடற்கரையில் இருந்து எடுத்து இரட்டைத் தீவுகளில் ஒன்றான ‘ஸ்மால்’ சிஸ்டர்ஸ் தீவில் உள்ள கடல் ஆமை சரணாலயத்தில் வைத்தனர்.

அச்சரணாலயம், கடல் ஆமை முட்டைகள் அடைகாக்கப்பட்டுப் பாதுகாப்பாக முட்டையிலிருந்து வெளிவந்து கடலுக்குள் செல்ல உதவுவதற்காக 2018ஆம் ஆண்டில் அத்தீவுகளில் தொடங்கப்பட்டது.

அதன்படி, வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் அதிகாரிகள் ஆமைக்குஞ்சுகளைக் கடற்கரையில் விட்டதும் 42 கடல்ஆமைக்குஞ்சுகள் மிகவும் சுறுசுறுப்பாகக் கடலை நோக்கி விரைந்து சென்றன.

சிஸ்டர்ஸ் தீவுகளில் உள்ள கடல் உயிரினப் பூங்காவில் முட்டையிலிருந்து வெளிவந்த ஆமைக் குஞ்சுகள் கடலில் விடுவிக்கப்பட்டது இந்த ஆண்டில் இது நான்காவது முறை.

இதுவரை கடல் ஆமைச் சரணாலயத்தில் இருந்து மொத்தம் 294 ஆமைக் குஞ்சுகள் முறையாகக் கடலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று தேசியப் பூங்காக் கழகம் தெரிவித்தது.

2026க்கான தற்போதைய குஞ்சு பொறிக்கும் பருவத்தில் சிஸ்டர்ஸ் தீவுகளில் 59 கடல் ஆமைகள் காணப்பட்டுள்ள நிலையில் 25 கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மே மாதம் முதல் அக்டோபர் வரையில் ஹாக்ஸ்பில் வகைக் கடல்ஆமைகள் சிங்கப்பூரின் கடல் எல்லைகளை நாடி வருகின்றன.

தீவில் முட்டையிடும் இருவகைக் கடல் ஆமைகளில் மற்றொன்று பச்சை நிறம் கொண்ட ‘கிரீன் டர்டல்’ எனப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
கடல்கடற்கரைதீவுஆமைதேசிய பூங்காக் கழகம்சரணாலயம்இயற்கைஅதிகாரிகாப்பகம்