ஜார்ஜ்டவுன்: சீனாவின் சிங் வம்ச ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தனித்துவமிக்க பழைமைவாய்ந்த பெரனாக்கான் பீங்கான் பொருள்கள், பினாங்கில் நடைபெற்ற 37வது அனைத்துலக பாபா நொன்யா மாநாட்டில் ஏலம் விடப்பட்டன.
1644 முதல் 1912ஆம் ஆண்டு வரை சீனாவை ஆட்சி செய்த சிங் வம்சக் காலத்தைச் சேர்ந்த தொல்பொருள்கள் இந்த ஏலத்தில் இடம்பெற்றிருந்தன. அவற்றில் பெரனாக்கான் பீங்கான் பொருள்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
இரும்பு, தங்கக் கூட்டுப்பொருள்களிலிருந்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட சாயங்களைக் கொண்டு நுணுக்கமாக வண்ணம் தீட்டப்பட்ட அந்தப் பீங்கான் பொருள்கள், அடர் சிவப்பு, இளஞ்சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களில் ஒளிர்ந்தன. நவீன தொழிற்சாலை உற்பத்திக்கு முந்தைய காலத்து கலை நுட்பங்களை இவை பறைசாற்றின.
இளஞ்சிவப்புக் குடும்பத்தைக் குறிக்கும் ‘ஃபமில் ரோஸ்’ பாணியில் அமைந்த, சிங் வம்சத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த ‘காம்செங்’ எனப்படும் பீங்கான் ஜாடி, ஏலத்தில் அதிகபட்சமாக 1,700 மலேசிய ரிங்கிட்டுக்கு (S$530) ஏலம் போனது.
இந்த ஜாடி 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது என்றும் சிங் வம்சத்தின் பிற்பகுதி முதல் குடியரசுக் காலத்தின் தொடக்கப் பகுதி வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் பதிவுபெற்ற ஏலதாரர் ஸ்டீபன் சூன் தெரிவித்தார்.
இந்த ஏலத்தில் மலேசியர்களும் சிங்கப்பூரர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று ஏலம் கேட்டனர்.
பினாங்கு மாநிலச் சீனச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மூன்று நாள் மாநாடு வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) தொடங்கியது. இதில் மலேசியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பெரனாக்கான் பேராளர்கள் கலந்துகொண்டனர்.
