கியவ்: உக்ரேன்மீது இரவு நேரத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 12 பேர் மாண்டனர், பத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மாண்டவர்களில் மூன்று பேர் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் சில நாள்கள் அமைதி நிலவிய நிலையில் தற்போது மீண்டும் கடுமையான தாக்குதல்கள் தொடங்கியுள்ளன.
சனிக்கிழமை (மே 24) ரஷ்யா உக்ரேனியத் தலைநகர் கியவ்வில் கடுமையாகத் தாக்குதல் நடத்தியது. அதில் 13 பேர் மாண்டனர். அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் (மே 25) உக்ரேன்மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கிடையே, உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள மூன்று இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
டொனெட்ஸ் பகுதியில் இரு இடங்களையும் சுமி பகுதியில் ஓர் இடத்தையும் தனது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா தற்போது உக்ரேனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நுழையத் தொடங்கியுள்ளது. இது வரும் நாள்களில் ரஷ்யா-உக்ரேன் இடையிலான போர் கடுமையாக மாறலாம் என்று கவனிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.