நிலத்தடி வெடிகளைக் கண்டுபிடித்து உயிர்களைக் காத்த எலிக்கு சிலை

நிலத்தடி வெடிகளைக் கண்டுபிடித்து உயிர்களைக் காத்த எலிக்கு சிலை

2 mins read
6b4707e1-d12e-45b5-b5ff-e07b9eb6f8f2
கம்போடியாவின் சியெம் ரீப் மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘மாகவா எலி’ சிலைதிறப்பு நிகழ்ச்சி. - படம்: கம்போடியன்ஸ்.காம்

சியெம் ரீப்: கம்போடியாவில் தரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போர்க்கால கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து, மக்களின் உயிரைக் காப்பாற்றி, எலிகளின் நாயகனாகத் திகழ்ந்த மாகவா எலிக்குச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 3) அந்தச் சிலை சியெம் ரீப் மாகாணத்தில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. கம்போடியாவின் மூத்த அமைச்சரும் கம்போடிய கண்ணிவெடி நடவடிக்கை ஆணையத்தின் முதல் துணைத் தலைவருமான லை துச் என்பவரின் முன்னிலையில் அந்நிகழ்வு நடைபெற்றது.

“மாகவாவின் பணி, அபாயங்களைக் கணிசமாகக் குறைத்து சமூகம் தனது வாழ்வாதாரத்தைப் பாதுகாப்புடன் மீட்டெக்க உதவியது,” என்று அவர் புகழாரம் சூட்டினார்.

சில கம்போடியர்கள் பல்லாண்டுகளாக வெடிக்காத வெடிபொருள்களால் மாசுபட்ட நிலத்தில் வாழ்ந்து, தொடர்ச்சியான ஆபத்தை எதிர்கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

“போரின்போது பயன்படுத்த நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளையும் வெடிபொருள்களையும் மாகவா கண்டுபிடித்துக் கொடுத்ததால் அவை பத்திரமாக அகற்றப்பட்டன.

“அதன்பயனாக, சிறுவர்கள் அச்சமின்றி நடமாட முடிகிறது; விவசாயிகள் தயக்கமின்றிப் பயிரிடுகிறார்கள்; சமூகமும் பாதுகாப்பாக மீண்டுள்ளது,” என்றும் திரு லை துச் தமது உரையில் குறிப்பிட்டார்.

தான்சானியாவில் 2013 நவம்பரில் பிறந்த மாகவா எலி, கம்போடியாவில் 2016ஆம் ஆண்டு கண்ணிவெடி அகற்றும் பணி தொடங்கியபோது கொண்டுசெல்லப்பட்டது. நிலத்தடி கண்ணிவெடிகளை மோப்பமிட்டு கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்ட மாகவாவுக்கு ‘நாயகஎலி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

தமது தனித்துவ மோப்ப சக்தி மூலம் ஏராளமான கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து சாதித்தது மாகவா.

2021 ஜூனில் மோப்பப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற மாகவா, 2022 ஜனவரியில் வயதுமூப்பு காரணமாக உயிரிழந்தது.

குறிப்புச் சொற்கள்