சிட்னி: நாட்டின் மேற்குப் பகுதியில் எலித் தொல்லை அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.
எலிகள் அதிகமாக உள்ளதால் அவை உணவு விநியோகக் கட்டமைப்பிற்குப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக ஆஸ்திரேலியா கூறுகிறது.
எலிகளால் உணவு விநியோகத்திற்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அரசாங்கம் பல்வேறு அமைப்புகளைக் கேட்டுக்கொண்டது.
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவனும் தொலைக்காட்சி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். மேற்கு ஆஸ்திரேலியாவில் இதன் தொடர்பில் அக்கறைகள் உள்ளதாக அவர் கூறினார்.
மேற்கு ஆஸ்திரேலியாவில் கோதுமை அதிகமாகச் சாகுபடி செய்யப்படும். ஏப்ரல் மாதத்தில் கோதுமைப் பயிர்களை எலிகள் அளவுக்கு அதிகமாக நாசம் செய்கின்றன. இதனால் பல டன் கோதுமை வீணாகுகிறது.
எலிகளைக் கட்டுப்படுத்த சக்தி வாய்ந்த நஞ்சு மருந்துகள் வேண்டும் என்றும் விவசாயிகள் குரல் எழுப்பியுள்ளனர்.
உலகின் நான்காவது ஆகப் பெரிய கோதுமை ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா உள்ளது.
1993ஆம் ஆண்டு எலிகளின் தொல்லையால் ஆஸ்திரேலியாவில் பல்லாயிரக் கணக்கான ஹெக்டர்களில் செய்யப்பட்ட விவசாயம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

