கோலாலம்பூர்: பங்ளாதேஷ் ஊழியர்களுக்கு மீண்டும் தொழிலாளர் சந்தையைத் திறந்துவிடுவது குறித்துப் பரிசீலிக்குமாறு மலேசியப் பிரதமரிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகப் பங்ளாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் கூறியிருக்கிறார்.
வெளிநாட்டு ஊழியர்கள் ஏமாற்றப்படுவதன் தொடர்பில் நீண்டகாலமாக நிலவும் விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்தனர்.
பங்களாதேஷ் ஊழியர்களுக்கு மலேசியா முக்கிய இடமாக அமைந்துள்ளது.
இருப்பினும், மலேசியாவில் வேலை கிடைப்பதற்காகத் தொழிலாளர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாவது, கட்டாயப்படுத்தப்பட்டு வேலையில் ஈடுபடுத்தப்படுவது போன்ற புகார்களுக்கு மத்தியில், கடந்த 2024ஆம் ஆண்டுமுதல் பங்ளாதேஷைச் சேர்ந்த ஊழியர்களை வேலைக்கு எடுப்பதை மலேசியா கட்டுப்படுத்தியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில், நூற்றுக்கணக்கான பங்ளாதேஷ் ஊழியர்கள் மலேசியாவிற்குச் சென்றபிறகு, வேலைவாய்ப்பு முகவர்களால் தங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைகள் அங்கு இல்லை என்பதை அறிந்து தவித்தனர். அதனால், அவர்கள் சட்டவிரோதமாக வேலை தேடவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். அதன் காரணமாக, அவர்கள் தடுத்துவைக்கப்பட்டு, நாடுகடத்தப்பட வேண்டிய நிலைக்கும் ஆளாயினர்.
“சட்டவிரோத ஊழியர்களுக்குச் சட்டபூர்வமான வேலைகளைக் கொடுப்பது, சாத்தியமானால், தடுத்துவைக்கப்பட்டுள்ள பங்ளாதேஷ் ஊழியர்களைத் தாயகத்திற்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான விவகாரங்களை நான் எழுப்புவேன்,” என்று திரு ரஹ்மான் செய்தியாளர்களிடம் கூறினார். அவர் மலேசியாவுக்குச் சென்றபோது பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார்.
இந்நிலையில், மலேசியாவின் பொருளியலுக்குப் பங்ளாதேஷ் ஊழியர்களின் வேலை மிக முக்கியம் என்று பிரதமர் அன்வார் கூறியிருக்கிறார். அவர் பங்ளாதேஷ் ஊழியர்கள் பாதுகாப்பிற்கு உறுதிதெரிவித்தார்.
நிறுவன, தனிப்பட்ட ஆதாயத்திற்காக ஊழியர்கள் ஏமாற்றப்படுவதையும் தவறாக நடத்தப்படுவதையும் மலேசியா இனி பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் எச்சரித்தார்.
தொடர்புடைய செய்திகள்
“மனிதவள ஒத்துழைப்பு, குறிப்பாக அந்த ஊழியர்கள், நமது பொருளாதாரத்திற்கு மிக முக்கியமாகத் திகழ்கின்றனர். ஆனால், அதே நேரத்தில் பல பழிகளும் கவலைகளும், குறிப்பாக மனிதநேயப் பிரச்சினைகள், ஊழியர்களை நடத்தும் விதம் போன்றவை எழுந்துள்ளன.
“நமக்கு ஊழியர்கள் தேவை. மேலும் முக்கியமாக, அந்த ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலனை நாம் பாதுகாக்க வேண்டும்,” என்றார் திரு அன்வார்.

