அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள தயார்: ஈரான் சூளுரை

அமெரிக்காவின் தடைகளை எதிர்கொள்ள தயார்: ஈரான் சூளுரை

2 mins read
6f4fe9ff-34a3-4b22-8828-91f7c2671090
(இடது) ஈரானிய அதிபர் மசூது பெசெ‌ஷ்கியான் பாகிஸ்தானின் தற்காப்புப் படைத் தலைவர் அசிம் முனிரைச் சந்தித்துப் பேசினார். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

அமெரிக்கா விதிக்கவிருக்கும் புதிய பொருளியல் தடைகளை எதிர்கொள்ள முழு நம்பிக்கையுடன் இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

அனைத்துலகப் பொருளியலிலிருந்து துண்டித்து ஈரானைத் தனிமைப்படுத்தும் நோக்கில் ‘இகோனமிக் டீ-டே” என்ற நடவடிக்கையை அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராக இருப்பதாக ஈரானிய பொருளியல் அமைச்சர் அலி மடானிசாடே தெரிவித்தார். அது மற்றோரு தோல்வியை நோக்கித்தான் அமெரிக்காவை இட்டுச்செல்லும் என்றார் அவர்.

புதிய விதிமுறைகள் குறித்து அறிவித்த அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்ஸன்ட், ஈரானுடன் நிதி ரீதியான பங்காளித்துவத்தை வைத்திருக்கும் நாடுகள் தனிமைப்படுத்தப்படும் என்று எச்சரித்தார்.

ஈரானுடனான உறவைத் துண்டிக்கத் தவறும் வங்கிகளும் வர்த்தகளும்கூட தனிமைப்படுத்தப்படும் என்றார் அவர்.

அமெரிக்கா இதுவரை மேற்கொண்ட ஆகப் பெரிய நிதி ரீதியான தாக்குதல் அது என்று திரு பெஸ்ஸன்ட் வருணித்தார்.

ஈரானின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளிகளான சீனா, அமெரிக்காவின் எச்சரிப்பை இதற்குமுன் நிராகரித்தது.

ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், ஈரானுடனான அனைத்து வர்த்தக, நிதி பரிவர்த்தனைகளை நிறுத்துவதாகக் கடந்த வாரம் அறிவித்தது. ஆனால், அதற்குச் சில மணிநேரங்கள் கழித்து வர்த்தகப் பங்காளி நாடுகள் தன்னுடன் தொடர்ந்து செயல்படும் என்பதில் நம்பிக்கை இருப்பதாக ஈரான் சொன்னது.

சீனாவும் ர‌ஷ்யாவும் அமெரிக்காவின் விதிமுறைகளை ஏற்கவில்லை என்ற மடானிசாடே, பிற நாடுகளும் அவ்வாறு இருக்கப்போவதாகக் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, ஈரான்மீதான அமெரிக்க - இஸ்ரேலியப் போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தானும் ஈரானும் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகப் பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) தெரிவித்தார்.

சண்டை தீவிரமடையாமல் தடுப்பது, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, போருக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகியவை குறித்து பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான அசிம் முனிரும் ஈரானிய அதிபர் மசூது பெசெ‌ஷ்கியானும் கலந்துரையாடியதாகப் பாகிஸ்தான் ராணுவம் அறிக்கை வெளியிட்டது.

வட்டார அமைதி குறித்தும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர்கள் பேசியதாக அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

இந்நிலையில், உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் பாதிக்கும் அதிகமான எண்ணெய் போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறு முந்தைய எரிசக்தி நெருக்கடியை இன்னும் மோசமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆறு மாதங்களுக்குமுன் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான்மீது போர் தொடங்கியபோது இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய எண்ணெய் நெருக்கடி உலக அளவில் ஏற்பட்டது.

அதையடுத்து உலக நாடுகள் அமெரிக்காவின் எண்ணெய் விநியோகம்மீது சார்ந்திருக்கத் தொடங்கின.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அமெரிக்காபோர்பொருளியல் தடைபேச்சுவார்த்தை