தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகத் தலைவர்களை வரவேற்க ஆயத்தம்; லாவோசில் பலத்த பாதுகாப்பு

2 mins read
c1286126-a62a-42ac-b624-1b71a9d05136
லாவோசில் பலத்த பாதுகாப்பு. - படம்: எஸ்பிஎச் மீடியா

ஆசியான் வட்டார அமைப்பின் இவ்வாண்டு தலைமைத்துவ நாடான லாவோஸ், அக்டோபர் 8 முதல் 11ஆம் தேதிவரை அதன் தலைநகர் வியந்தியனில் நடைபெறும் உச்சநிலை மாநாட்டுக்காகத் தயார்நிலையில் உள்ளது.

கிட்டத்தட்ட 2,000 பேராளர்களும் 1,000 செய்தியாளர்களும் இந்த உச்சநிலை மாநாட்டிலும் தொடர்புடைய மாநாடுகளிலும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாவோஸ் பாதுகாப்புப் படையினர் உச்ச விழிப்புநிலையில் உள்ளனர். லாவோஸ் மக்கள் ராணுவம், தேசிய பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் முயற்சிகளை ஒருங்கிணைத்து நாடு முழுவதும் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, தலைநகரில் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

லாவோசில் பலத்த பாதுகாப்பு.
லாவோசில் பலத்த பாதுகாப்பு. - படம்: எஸ்பிஎச் மீடியா

தலைநகரின் ஒன்பது முக்கிய இடங்களில் 661வது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 135 ராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டுள்ளனர். ராணுவ வாகனங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

லாவோஸ் மக்கள் ராணுவத்தின் வரலாற்று அருங்காட்சியகம், ‘வட்டாய்’ அனைத்துலக விமான நிலையம், பொழுதுபோக்குப் பூங்காக்கள், அருகிலுள்ள கிராமங்கள் முதலிய இடங்களிலும் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நகர் முழுதும் மற்ற ஆயுதப் படைகள் கைகோத்து, பாதுகாப்பை உறுதிசெய்து வருகின்றன.

லாவோசில் பலத்த பாதுகாப்பு.
லாவோசில் பலத்த பாதுகாப்பு. - படம்: எஸ்பிஎச் மீடியா

அக்டோபர் 7 முதல் 13 வரை அனைத்து கேளிக்கை, கரவோக்கே வளாகங்களையும் மூடுமாறு வியந்தியன் காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் நாட்டின் பெயரைச் சீர்குலைக்கும் எவ்விதச் சம்பவங்களும் நடக்காமல் உறுதிசெய்வதற்காகவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதனுடன், உச்சநிலை மாநாடு தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும் இது உதவும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆணைகளுக்கு முரண்பட்டு நடப்பவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும்.

இதற்கிடையே, ஆசியான் மாநாடுகளின்போது போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் அனைத்துலகப் பேராளர்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ளவும் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் வியந்தியனில் உள்ள 497 பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட லாவோஸ் பிரதமர் சொனாக்சே சிஃபண்டோன் அக்டோபர் 6ஆம் தேதி ‘வட்டாய்’ அனைத்துலக விமான நிலையத்திற்குச் சென்றார். அதன்பின்னர் மாநாடு நடைபெறும் தேசிய மாநாட்டு மண்டபத்திற்குச் சென்றார்.

அனைத்துத் துறையினரின் ஒன்றுபட்ட முயற்சியாக இது இருக்க வேண்டும் என்று லாவோஸ் பிரதமர் வலியுறுத்தினார்.

லாவோசில் பலத்த பாதுகாப்பு.
லாவோசில் பலத்த பாதுகாப்பு. - படம்: எஸ்.பி.எச் மீடியா

நாட்டின் வெவ்வேறு சமூகத்தினரும் ஒன்றுபட்ட மக்களாக இந்த உச்சநிலை மாநாட்டின் வெற்றிக்கு ஆதரவளிக்குமாறும் அவர் அறைகூவல் விடுத்தார். லாவோசின் மொத்த மக்கள்தொகை 7.5 மில்லியன். அங்கு கிட்டத்தட்ட 50 இனச் சமூகங்கள் உள்ளன.

மருத்துவப் பராமரிப்பு சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட மருத்துவ அதிகாரிகள் மாநாட்டிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநாட்டு மண்டபம், பேராளர்கள் தங்குமிடங்கள் போன்றவற்றில் தற்காலிக மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐந்து மத்திய மருத்துவமனைகளில் நோயாளிகளைக் கொண்டுசெல்வதற்கான 16 வாகனங்களுக்கும் 10 அவசர மருத்துவ வாகனங்களுக்கும் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்