இந்தோனீசியாவில் எட்டுப் பேரைக் கொன்ற பிரிவினைவாதிகள்

இந்தோனீசியாவில் எட்டுப் பேரைக் கொன்ற பிரிவினைவாதிகள்

1 mins read
4c956efe-4095-40f7-bc90-b5597edc25af
கொல்லப்பட்டவர்கள் தங்கச் சுரங்க ஊழியர்கள் என்று இந்தோனீசிய ராணுவம் தெரிவித்தது. - கோப்புப்படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கு எல்லை மாநிலமான ஹைலண்ட் பப்புவாவில் ஆயுதமேந்திய பிரிவினைவாதிகள், பொதுமக்களில் எட்டுப் பேரைக் கொன்றுவிட்டதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை (மே 21) தெரிவித்தது.

கொல்லப்பட்ட எண்மரும் யகுகிமோ பகுதியின் தங்கச் சுரங்க ஊழியர்கள் எனக் குறிப்பிட்ட ராணுவ அதிகாரி விர்யா அர்த்தடிகுனா, பிரிவினைவாதிகளின் கொலைச்செயலை வன்மையாகக் கண்டித்தார்.

கொல்லப்பட்ட ஊழியர்களின் உடல்களை மீட்கும் பணிகள் இடம்பெறுவதாக அவர் கூறினார்.

அந்தக் கொடூரச் செயலுக்கு மேற்கு பப்புவா தேசிய விடுதலை ராணுவம் எனும் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

தாங்கள் கொன்ற எண்மரும் தங்கச் சுரங்க ஊழியர்கள் என்ற போர்வையில் இருந்த ராணுவ உளவு அதிகாரிகள் என்று அவ்வமைப்பு தெரிவித்தது.

மேலும், தங்கச் சுரங்க ஊழியர்கள் அல்லது டாக்சி ஓட்டுநர்கள் என்ற போர்வையில் ராணுவ அதிகாரிகளைப் பப்புவாவிற்கு அனுப்புவதை இந்தோனீசிய அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால், கொல்லப்பட்டவர்கள் ராணுவ அதிகாரிகள் என்ற பிரிவினைவாதிகளின் கருத்தை லெப்டினன்ட் கர்னல் அர்த்தடிகுனா அடியோடு மறுத்தார்.

கொலையாளிகளைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார். தாக்குதலுக்குப் பிறகு யகுகிமோ வட்டாரம், அபாயகரமானதாகிவிட்டது என்ற அவர், ஆயினும் தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்