பெர்லின்: அமெரிக்கா அதன் ராணுவ வீரர்களைத் தமது நாட்டிலிருந்து மீட்டுக்கொள்ள முடிவெடுத்தது எதிர்பார்த்த ஒன்று என ஜெர்மனியின் தற்காப்பு அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை (மே 3) தெரிவித்ததாக பிபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேவேளையில் மேலும் அதிக எண்ணிக்கையில் வீரர்களை மீட்டுக்கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, (நேட்டோ) அமைப்பு, ராணுவ வீரர்களை மீட்டுக்கொள்ளும் முடிவு குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அறிவித்தது.
ஜெர்மனியில் தற்போது அமெரிக்க ராணுவ வீரர்கள் 36,000 பேர் முழுநேர ராணுவப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 வீரர்களை அமெரிக்கா மீட்டுக்கொள்ளவிருக்கிறது.
ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியில் அமெரிக்க வீரர்கள் இருப்பது, இரு நாடுகளுக்கும் நன்மையே பயக்கும் என்று தற்காப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டொரியஸ், டிபிஏ ஊடகத்திடம் கூறினார்.
அமெரிக்காவின் முடிவைத் தெளிவாகப் புரிந்துகொள்ள அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வருவதாக நேட்டோ அமைப்பின் பேச்சாளர் அலிசன் ஹார்ட் கூறினார்.
“இதற்கிடையே நாங்கள் 5,000 என்ற எண்ணிக்கையையும் கடந்து மேலும் அதிகமான வீரர்களை மீட்டுக்கொள்வோம்,” என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் சனிக்கிழமை (மே 2) செய்தியாளர்களுக்குப் பதிலளிக்கும்போது தெரிவித்தார்.
மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை. மத்திய கிழக்குப் போரில் ஈரானால் அமெரிக்கா அவமானப்படுத்தப்பட்டது என்று அண்மையில் ஜெர்மனியின் பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் கூறியது, அமெரிக்காவின் இந்த முடிவுக்குக் காரணம் என்று கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஜெர்மனி தவிர்த்து, இத்தாலியில் 12,000 வீரர்களையும் பிரிட்டனில் 10,000 வீரர்களையும் அமெரிக்கா தற்காப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
எண்ணிக்கை அடிப்படையில் ஐரோப்பாவில் ஜெர்மனியில்தான் அதிக அமெரிக்க வீரர்கள் ராணுவப் பணியாற்றுகின்றனர்.

