தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பள்ளி கண்காணிப்புக் கேமராக்களைக் காவல்துறையுடன் இணைக்க பரிந்துரை

2 mins read
46682821-ddc6-4e2f-8839-4ef0b56b5815
சிலாங்கூரில் உள்ள பண்டார் உத்தாமா என்ற இடத்தில் 14 வயது மாணவரைக் கொலை செய்த குற்றத்தை 15 வயது சக மாணவர் எதிர்கொள்கிறார். - படம்: சின் சியூ

கோலாலம்பூர்: மலேசியாவின் உள்துறை அமைச்சு பள்ளிக்கூடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை காவல்துறையுடன் நேரடியாக இணைக்கும் பரிந்துரை குறித்து ஆலோசித்துவருகிறது. பள்ளிகளின் நிலையை அப்போதைக்கு அப்போதே கண்காணித்து பாதுகாப்பை வலுப்படுத்துவது இலக்கு.

பள்ளிகளில் உள்ள முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த கல்வியமைச்சு 8 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் சைஃபுடின் நசுடியோன் இஸ்மாயில் கூறினார்.

“அந்தக் கேமராக்களைக் காவல்துறை கட்டமைப்புடன் நேரடியாக இணைப்பதற்கான சாத்தியம் குறித்து ஆராயும்படி கல்வியமைச்சிடம் கூறவிருக்கிறேன்,” என்று திரு சைஃபுடின் குறிப்பிட்டார்.

2026ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாவுக்கான விவாதத்தை முடித்துவைத்து திரு சைஃபுடின் பேசினார்.

மேலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த பள்ளிக்கூடங்களைச் சுற்றி காவல்துறையின் கண்காணிப்பை அதிகரிக்கவிருப்பதாகவும் திரு சைஃபுடின் சொன்னார்.

பள்ளிகளில் நிகழக்கூடிய பகடி வதை, தாக்குதல், வன்முறை ஆகிய விவகாரங்களைக் கையாள கல்வியமைச்சுக்கும் தமது அமைச்சுக்கும் அப்பாற்பட்ட ஒத்துழைப்பு தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

அத்தகைய முயற்சிகளை அமைச்சுகளால் தனியாகச் சுமக்க முடியாது என்ற திரு சைஃபுடின், பெற்றோர்- ஆசிரியர் சங்கம் போன்ற சமூகப் பங்காளிகளும் அதில் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பள்ளிக்கூடங்களில் நேர்ந்த இரண்டு கொலைச் சம்பவங்களை அவர் சுட்டினார்.

முதல் சம்பவம் சபா மாநிலத்தில் உள்ள லஹாட் டாத்து என்ற இடத்தில் கடந்த ஆண்டு மார்ச் 21ஆம் தேதி நேர்ந்தது. இரண்டாவது சம்பவம் இம்மாதம் 14ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள பண்டார் உத்தாமா என்ற இடத்தில் நேர்ந்தது. அதில் 14 வயது மாணவரைக் கொலை செய்த குற்றத்தை 15 வயது சக மாணவர் எதிர்கொள்கிறார்.

பகடிவதையைப் பொருத்தவரை 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 687 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை பள்ளிச் சூழல்களில் 112 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் பதிவானதை திரு சைஃபுடின் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்