தோக்கியோ: செப்டம்பர் மாதத்தில் பதவி விலகுவதாக ஜப்பானியப் பிரதமர் திரு ஃபூமியோ கிஷிடா அறிவித்துள்ளார். ஜப்பானின் ஆளுங்கட்சியான எல்டிபியின் கட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றார் அவர்.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதியன்று ஜப்பானியப் பிரதமராக திரு கிஷிடா பதவி ஏற்றார்.
அவரது பதவி காலத்தில் விலைவாசி உயர்வு, அரசியல் சர்ச்சைகள் ஆகியவற்றால் ஜப்பான் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய மக்கள் மத்தியில் திரு கிஷிடாவுக்கு இருந்த ஆதரவு பேரளவில் குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
“நாட்டின் தலைவர் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாவிடில் சுமுகமான, சிறந்த முறையில் ஆட்சி செய்ய முடியாது. மக்களைக் கருத்தில்கொண்டு இந்த கடினமான முடிவை எடுத்தேன். அரசியல் சீர்திருத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பதவி விலக தீர்மானித்துள்ளேன்,” என்று செய்தியாளர் கூட்டத்தில் திரு கிஷிடா தெரிவித்தார்.
புதிய கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க எல்டிபி கட்சி செப்டம்பர் மாதம் கட்சித் தேர்தல் நடத்த இருக்கிறது. புதிய தலைவர் ஜப்பானியப் பிரதமராகப் பொறுப்பேற்பார்.
சர்ச்சைக்குரிய யுனிஃபிகேஷன் தேவாலயத்துடன் எல்டிபி கட்சிக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியானதும் ஜப்பானியர்கள் மத்தியில் திரு கிஷிடாவுக்கு இருந்த ஆதரவு மளமளவெனக் குறைந்தது.
ஜூலை 8ஆம் தேதியன்று ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை செய்யப்பட்டதை அடுத்து யுனிஃபிகேஷன் தேவாலயத்துடன் எல்டிபி கட்சினர் பலருக்கு இருந்த தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது.
தொடர்புடைய செய்திகள்
திரு அபேவுக்கு அந்தத் தேவாலயத்துடன் தொடர்பு இருப்பதாக நம்பி அவரைக் கொன்றதாக 41 வயது ஆடவர் ஒருவர் ஒப்புக்கொண்டார்.
யுனிஃபிகேஷன் தேவாலயம் விரித்த மோசடி வலையில் தமது தாயார் சிக்கி நொடித்துப்போனதாக அவர் கூறினார்.
தமது குடும்பத்தை அந்தத் தேவாலயம் அழித்ததாக அவர் தெரிவித்தார்.
யுனிஃபிகேஷன் தேவாலயத்துடன் 112 ஜப்பானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர்கள் பெயர்களைக் கொண்ட பட்டியலை ஜப்பானிய நாளிதழான நிக்கான் கென்டான் 2022ஆம் ஆண்டில் வெளியிட்டது.
அந்தப் பட்டியலில் 24 தற்போதைய, முன்னாள் அமைச்சர் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பெயர்களும் இடம்பெற்றன.
அந்தப் பட்டியலில் பிரதமர் கிஷிடாவின் பெயர் இல்லை.
அதே போல எல்டிபி கட்சியின் தலைமைச் செயலாளரும் ஜப்பானின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான டொஷிமிட்சு மொடிகியின் பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை.
எல்டிபி கட்சிக்கும் யுனிஃபிகேஷன் தேவாலயத்துக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இல்லை என்று திரு மொடிகி தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் மட்டுமின்றி பதிவு செய்யப்படாத அரசியல் நன்கொடைகள் தொடர்பான சர்ச்சையிலும் எல்டிபி கட்சியின் பெயர் அடிபட்டது.
இது திரு கிஷிடாவை வெகுவாகப் பாதித்தது.
ஊழல் தொடர்பான இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க, அதிகரித்து வரும் விலைவாசியை சமாளிக்கும் வகையில் சம்பளம் உயரவில்லை என்று ஜப்பானியர்கள் அதிருப்தி குரல் எழுப்பினர்.
இந்த விவகாரங்கள் அனைத்தும் திரு கிஷிடாவுக்கு நெருக்குதல் அளித்த நிலையில், ஜப்பானியர்கள் மத்தியில் தமக்கு இருந்த ஆதரவு குறைந்ததை அடுத்து, பதவி விலக அவர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

