கோலாலம்பூர்: மலேசியாவில் மேலும் 17,786 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுவே அங்கு பதிவாகி உள்ள ஆக அதிகமான அன்றாடப் பதிவு.
இதன்மூலம் மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.113,272ஆக உயர்ந்துள்ளது.
கொவிட்-19 பாதிப்பு மோசம் அடைந்துள்ளதால் தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுபடுத்த மலேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்பதிவு செய்யத் தேவையில்லாமல் நேரடியாகத் தடுப்பூசி போடும் நிலையத்துக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அணுகுமுறை நாளை தொடங்க இருந்தது.
ஆனால் இத்திட்டம் நாளைக்கு மறுநாள் தொடங்கும் என்று மலேசியாவின் தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை ஒருங்கிணைக்கும் அமைச்சரான கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.
கிள்ளான் பள்ளத்தாக்கில் முன்பதிவு செய்யாமல் நேரடியாக தடுப்பூசி நிலையத்துக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 2ஆம் தேதி) தொடங்குகிறது.
40 வயதுக்கு மேற்பட்டோருக்கும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியிலிருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் இந்தச் சேவை வழங்கப்படும் என்று திரு கைரி தெரிவித்தார்.
"குறிப்பிட்ட சில தடுப்பூசி மையங்களில் மட்டும் முன்பதிவு செய்யாமல் அங்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். பொய்ச் செய்தி பரவுவதைத் தடுக்க இந்தத் தகவலை நான் தெரிவிக்கிறேன்," என்றார் அமைச்சர் கைரி.
இந்தச் சேவையை வழங்கும் தடுப்பூசி நிலையங்களுக்கான பட்டியல் வெளியிடப்படும் என்றார் அவர். புதிய திட்டத்தின்கீழ் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு தடுப்பூசி போடப்படும் என்றார் அவர்.
நாளைக்குள் கிள்ளான் பள்ளத்தாக்கில் வசிப்போரில் 99 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான தேதியும் நேரமும் உறுதி செய்யப்படும் என்று திரு கைரி நம்பிக்கை தெரிவித்தார்.

