தோக்கியோ: ஜப்பானில் இதுவரை இல்லாத அளவாக 2025 முற்பாதியில் மட்டும் 1.2 மில்லியன் தூண்டுகளவுச் (Phishing) சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய காவல்துறை அமைப்பின் தரவுகள் காட்டுகின்றன.
இதே வேகத்தில் சென்றால் ஓராண்டுச் சாதனையும் முறியடிக்கப்பட்டுவிடும் எனச் சொல்லப்படுகிறது.
நிறுவனங்கள் அல்லது வங்கிகள் போன்றவற்றின் இணையத்தளங்கள் எனக் குறிப்பிட்டு, போலியான இணையத்தளங்களுக்கு இட்டுச்செல்லும் மின்னஞ்சல்கள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
அத்தகைய போலி இணையத்தளங்களுக்குச் செல்வது, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை மோசடிப் பேர்வழிகள் அறிந்துகொள்ள வழிவகுக்கும்.
கடந்த 2019ஆம் ஆண்டில் தூண்டுகளவு தொடர்பில் 55,787 புகார்கள் பதிவான நிலையில், 2024ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 1,718,036ஆக உயர்ந்தது.
இந்நிலையில், இவ்வாண்டு முற்பாதியில் மட்டும் 1,196,314 தூண்டுகளவுப் புகார்கள் பதிவாயின. அத்துடன், அக்காலகட்டத்தில் இணைய வங்கிப் பரிவர்த்தனை மோசடிகள் மூலமாக ஏறக்குறைய 4.22 பில்லியன் யென் (S$36.7 மில்லியன்) பண இழப்பு ஏற்பட்டது.
இதனிடையே, ‘குரல் தூண்டுகளவு’ எனும் புதுவகை உத்தியை மோசடிப் பேர்வழிகள் கையாள்வது அதிகரித்துள்ளது. தொலைபேசி வழியாகத் தங்களது தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொள்ளச் செய்வதுதான் அந்த உத்தி.
அத்துடன், பங்கு வணிக நிறுவனங்களிடமிருந்து வரும் தூண்டுகளவு மின்னஞ்சல்களின் எண்ணிக்கையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியில் அத்தகைய 104 புகார்கள் பதிவான நிலையில், மே மாதத்தில் அது 73,857ஆக உயர்ந்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இவ்வாண்டு ஜனவரி-ஜூன் காலகட்டத்தில் 116 பிணைநிரல் தாக்குதல் சம்பவங்களும் பதிவாயின.

