செங்கடல் பாதுகாப்பு: சவூதி அரேபியா அமைத்த 14 நாடுகளின் கூட்டணி

செங்கடல் பாதுகாப்பு: சவூதி அரேபியா அமைத்த 14 நாடுகளின் கூட்டணி

2 mins read
76cb9095-39d1-4fe0-91bb-b3a2ee873417
செங்கடலில், ஏமனின் கரையிலிருந்து காணப்படும் பாப் அல் மந்தாப் நீரிணை - படம்:ஏஎஃப்பி

ரியாத்: செங்கடலில் கப்பல் போக்குவரத்துக்குப் பாதுகாப்பு வழங்கும் இலக்குடன் 14 நாடுகளுடன் கூட்டணி அமைத்துள்ளதாக சவூதி அரேபியா வியாழக்கிழமை (ஜூலை 30) அறிவித்துள்ளது.

உலக எண்ணெய் விநியோகத்துக்குச் செங்கடலில் அமைந்துள்ள ‘பாப் அல் மந்தாப்’ நீரிணை முக்கிய அங்கம் வகிக்கிறது.

ஈரானின் ஆதரவுடன் ஏமனிலிருந்து இயங்கும் ஹூதி போராளி அமைப்பு, அண்மையில் அவ்வட்டாரத்தில் உள்ள சவூதி எண்ணெய் உற்பத்தி வளங்கள்மீதும் எண்ணெய்க் கப்பல்கள்மீதும் தாக்குதல் நடத்தியது.

கடைசியாக 2022ஆம் ஆண்டில் எட்டப்பட்ட சவூதி அரேபியா, ஹூதி அமைப்புகளுக்கு இடையிலான சண்டை நிறுத்தத்துக்கு அத்தாக்குதல் பங்கம் விளைவித்தது.

அதனை எதிர்கொள்ளும் விதமாக எகிப்து, துருக்கி, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவுடன் எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அனைத்துலக வர்த்தகப் பாதைகளைப் பாதுகாக்க சவூதி அரேபியா தற்காப்புக் கூட்டணி முயற்சியை முன்னெடுத்தது.

ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 51 நாடுகள், அமைப்புகள் ஆகியவற்றை சவூதி அரேபியா தொடர்புகொண்டது. அவற்றின் 43 பிரதிநிதிகள் தலைநகர் ரியாத்தில் நடந்த கூட்டணி மாநாட்டில் கலந்துகொண்டனர்.

பஹ்ரைய்ன், பங்ளாதேஷ், ஜிபவ்டி, எகிப்து, ஜோர்தான், குவைத், நைஜீரியா, பாகிஸ்தான், கத்தார், சோமாலியா, சூடான், துருக்கி, ஏமன் ஆகிய நாடுகள் அந்தக் கூட்டணியில் சவூதி அரேபியாவுடன் இணைந்துள்ளன.

சவூதி அரேபியத் தற்காப்பு அமைச்சு புதிய கூட்டணியின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

கடல் போக்குவரத்தின் பாதுகாப்பை மேம்படுத்தி சுதந்திரமாகப் பயணம் மேற்கொள்ளவும் அனைத்துலக வர்த்தகப் பாதையைக் கட்டுக்குள் வைத்து எரிபொருள் விநியோகத்தை உறுதிசெய்து அனைவரும் பகிரும் பாப் அல் மந்தாப் நீரிணை, செங்கடல், ஏடன் வளைகுடா ஆகிய பகுதிகளின் நலனைத் தற்காப்பது கூட்டணியின் இலக்கு என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்
நீரிணைசவூதி அரேபியாதற்காப்புகூட்டணிபாதுகாப்புஐரோப்பிய ஒன்றியம்கடல்மத்திய கிழக்கு