சிட்னி: ஆஸ்திரேலியா அண்மையில் அறிவித்த சமூக ஊடகத் தடைக்கு எதிராகத் தகவல் பதிவு இணையத்தளமான ரெடிட் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) வழக்குத் தொடுத்துள்ளது.
16 வயதுக்குக் குறைந்தோர், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் தடை வியாழக்கிழமை நடப்புக்கு வந்தது. அரசியல் பேச்சுரிமையைப் புதிய சட்டம் மீறுவதாக ரெடிட் நிறுவனம் கூறியது.
அமெரிக்கப் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள அந்நிறுவனம் ஆஸ்திரேலியாவிலும் செயல்படுகிறது.
காமன்வெல்த் நாடான ஆஸ்திரேலியாவுக்கும் தொடர்பு அமைச்சர் அனிக்கா வெல்சுக்கும் எதிராக அது வழக்குத் தொடுத்துள்ளது.
திரு வெல்சின் பேச்சாளர் உடனடியாக அதுபற்றிக் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
நாட்டின் புதிய சட்டத்திற்கு எதிராக விடுக்கப்படும் சவால்களை எதிர்கொள்ளத் தயார் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் ஏற்கெனவே கூறியிருக்கிறது.
ரெடிட், மெட்டாவின் இன்ஸ்டகிராம், ஆல்ஃபபெட்டின் யூடியூப், டிக்டாக் உள்ளிட்ட 10 நிறுவனங்கள், ஆஸ்திரேலியாவின் தடைக்கு எதிராக ஓராண்டுக்கு முன்பிருந்தே குரல் கொடுத்துவந்தன. இருப்பினும் இறுதியில் அவை புதிய சட்டத்துக்குக் கட்டுப்படுவதாகக் கூறின.
அதனை மீறுவோர் புதிய சட்டத்தின்படி, A$49.5 மில்லியன் (S$42.6 மில்லியன்) அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் சமூக ஊடகத்தைப் பயன்படுத்தும் இளையருக்கும் அவர்களைக் கவனித்துக்கொள்வோருக்கும் அபராதம் விதிக்கப்படமாட்டாது.
தொடர்புடைய செய்திகள்
விதிமுறையை நடைமுறைப்படுத்த ஒருவரின் வயது, இணைய நடவடிக்கைகள், தம்படம் (செல்ஃபி) முதலியவற்றைப் பயன்படுத்துவதாகச் சமூக ஊடகங்கள் தெரிவித்தன.
சென்ற மாதம் பதின்மவயதினர் இருவர், ஆஸ்திரேலியாவின் புதிய சட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தனர். அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதம் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.
தடைக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் மற்றத் தரப்புகளுடன் சேரும் எண்ணம் ரெடிட் நிறுவனத்திற்கு இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரமொன்று குறிப்பிட்டது.

