கோலாலம்பூர்: மலேசியாவில் மூதாட்டி ஒருவர் அட்டைப்பெட்டியில் சேமித்து வைத்திருந்த 30,000 ரிங்கிட்டைக் (S$8,700) கரையான் அரித்துவிட்டது.
அவர் அந்தப் பணத்தைத் தன்னுடைய மெக்கா யாத்திரைக்காக சேமித்து வைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்த மூதாட்டியின் பேரன் திரு கைருல் அசார், ஃபேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றைத் திங்கட்கிழமை வெளியிட்டார். அதில், கரையான்களால் அரிக்கப்பட்டப் பணத்தாள்களைக் காண முடிந்தது.
அந்த மூதாட்டி நம்பிக்கையோடு கரையான்கள் அரித்த பணத்தாள்களில் பாதியை மலேசிய மத்திய வங்கியில் மாற்றுவதற்காக எடுத்துச்சென்றுள்ளார் எனவும் மற்றப் பணத்தாள்கள் மாற்ற முடியாத அளவிற்கு கரையான்கள் அரித்திருந்தன எனவும் திரு அசார் தெரிவித்தார்.
“இம்முறை என் பாட்டியால் மெக்காவுக்குச் செல்ல முடியவில்லை. அதனால், அவர் தன்னுடைய மெக்கா யாத்திரையை 2024ஆம் ஆண்டு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்,” எனத் திரு கைருல் தன்னுடைய ஸ்பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்
மேலும், அளவுக்கு அதிகமான பணத்தை வீட்டில் சேமித்து வைக்கக்கூடாது என்பதை இதன்மூலம் கற்றுக்கொண்டதாகவும் அவர் சொன்னார்.

