மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சுவிட்சர்லாந்தில் பொது வாக்கெடுப்பு

மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த சுவிட்சர்லாந்தில் பொது வாக்கெடுப்பு

1 mins read
e56e63c6-d279-4244-97ff-f1c6d10f032a
சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 2040களின் தொடக்கத்தில் பத்து மில்லியனைத் தொடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஸுரிக்: சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையைப் பத்து மில்லியனுக்குள் வைத்திருப்பது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) அங்குப் பொது வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்பு மாற்றம், 2050ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மக்கள்தொகை பத்து மில்லியனைத் தாண்டக்கூடாது எனப் பரிந்துரைக்கிறது.

தற்போதைய அதிகாரபூர்வ கணிப்புகளின்படி, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகை 2040களின் தொடக்கத்திலேயே அந்த வரம்பைத் தொடும் என்று தெரியவந்துள்ளது.

அதிகரித்துவரும் குடிநுழைவு, பொதுச் சேவைகள், வீடமைப்பு மீதான அழுத்தம் காரணமாக இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொழிலாளர் சுதந்திர நடமாட்ட உடன்பாட்டை சுவிட்சர்லாந்து ரத்து செய்ய நேரிடும்.

இது அந்நாட்டின் பொருளியலிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளிலும் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இது பிரிட்டனின் ‘பிரெக்சிட்’ வாக்கெடுப்போடு ஒப்பிடப்படுகிறது.

சுவிட்சர்லாந்தின் தற்போதைய மக்கள்தொகை ஒன்பது மில்லியனைத் தாண்டிவிட்டது. அதனால், உள்கட்டமைப்பு வசதிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இடதுசாரியினர் சிலரும் இதற்கு ஆதரவளிக்கின்றனர்.

எனினும், ஏற்றுமதியைச் சார்ந்திருக்கும் சுவிட்சர்லாந்துப் பொருளியலுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அரசாங்கமும் நாடாளுமன்றமும் அந்த முன்மொழிவை நிராகரிக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.

கடந்த வாரம் வெளியான இறுதிக்கட்டக் கருத்துக்கணிப்புகளும் இத்திட்டத்திற்கு எதிரான முடிவுகளையே காட்டியுள்ளன.

குறிப்புச் சொற்கள்