தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வட்டார நாடுகள் திறந்த மனத்துடன் இயங்கவேண்டும்: பிரதமர் வோங் வலியுறுத்து

2 mins read
f919f2f9-8fcb-4f5f-9cab-ba69c7306678
கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் விரிவான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: ராய்ட்டர்ஸ்

விரிவான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவ அமைப்பு தனது முழு ஆற்றலை எட்டுவதற்கு தொடர்ந்து திறந்த மனத்துடன் இருப்பது அவசியம் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் முக்கியம் என்றார் அவர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திங்கட்கிழமை (அக்டோபர் 27) நடைபெற்ற ஐந்தாவது விரிவான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவ உச்சநிலை மாநாட்டில் திரு வோங் பேசினார்.

நிச்சயமற்ற சூழ்நிலைகளில் வட்டாரப் பொருளியல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

“தற்போதைய நிச்சயமற்ற சூழலில், நமது பொருளியல்கள் ஒன்றாகச் செயல்படுவது முன்னெப்போதையும்விட முக்கியத்துவம் பெறுகிறது. நமது மக்களுக்குத் தடையற்ற வர்த்தகத்தால் ஏற்படக்கூடிய பலன்களைக் காட்டவும் நமது வட்டாரத்திற்கு வளப்பத்தைக் கொண்டுவரவும் அவ்வாறு இணைந்து இயங்குவது அவசியம்,” என்றார் அவர்.

விரிவான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவம் 2022ஆம் ஆண்டு நடப்புக்கு வந்தது. உலகின் ஆகப் பெரிய வர்த்தக அமைப்பு அது.

ஆசியானில் உறுப்பியம் பெற்றுள்ள 10 நாடுகளும் (2025ல் இணைந்த திமோர் லெஸ்டே தவிர்த்து) சீனா, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவையும் அதில் அங்கம் வகிக்கின்றன.

பல்வேறு விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகக் கட்டமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கின்றன. விரிவான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவ அமைப்பு, நாடுகள் தனித்தனியாக இயங்குவதைக் காட்டிலும் ஒன்றிணைந்து செயல்பட்டால் கூடுதலாகச் சாதிக்கமுடியும் என்றார் பிரதமர் வோங்.

அது உண்மையான அனுகூலங்களைக் கொண்டுவந்ததாக அவர் கூறினார். தீர்வைகளைக் குறைப்பது, வர்த்தக விதிமுறைகளை ஒரே மாதிரியாக வைத்துக்கொள்வது முதலியவற்றைத் திரு வோங் குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் அந்த அமைப்பில் ஆழ்ந்த கடப்பாடு கொண்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர், அது மேலும் சிறப்பாகச் செயல்பட மூன்று முன்னுரிமைகளைக் கோடிகாட்டினார்.

முதலாவதாக, வர்த்தக உடன்பாடு முழுமையாகவும் திறம்படவும் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுப்பு நாடுகள் உறுதிசெய்ய வேண்டும். அதற்கு, இணக்கம் காணப்படாத அம்சங்கள் குறித்த பணிகளை அவை தொடர்வது அவசியம்.

இரண்டாவதாக, அமைப்பு தொடர்ந்து திறந்த மனத்துடன் விரிவாக்கத்திற்குத் தயாராக இருக்க வேண்டும். அமைப்பின் தேவைகளையும் தரநிலைகளையும் நிறைவேற்றக்கூடிய புதிய பொருளியல்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக, வர்த்தக உடன்பாட்டை உறுப்பு நாடுகள் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். பசுமை, மின்னிலக்கப் பொருளியல்கள் போன்ற புதிதாக உருவாகிவரும் துறைகளுக்குப் புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும் என மற்ற தலைவர்கள் கூறியதைத் தாமும் ஒப்புக்கொள்வதாகத் திரு வோங் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூர் 2027ல் விரிவான வட்டாரப் பொருளியல் பங்காளித்துவத்தை மற்ற நாடுகளுடன் சேர்ந்து மறுஆய்வு செய்வதற்கு ஆர்வத்துடன் இருக்கிறது. அப்போதுதான் பங்காளித்துவத்தைத் தொடர்ந்து மேம்படுத்த முடியும்,” என்று தெரிவித்தார் பிரதமர் வோங்.

குறிப்புச் சொற்கள்