மணிலா: மத்திய கிழக்குப் போரால் வட்டார வளர்ச்சி கணிசமாக மெதுவடையக்கூடும் என்று ஆசியான் பொருளியல் அமைச்சர்கள் கூறியிருக்கின்றனர்.
அந்தப் போர், உலக எரிசக்திப் பாதுகாப்புக்கு அதிக மிரட்டல் விடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். வெள்ளிக்கிழமை (மே 1) வெளியிட்ட கூட்டறிக்கையில் ஆசியான் அமைச்சர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனர்.
“ஹோர்முஸ் நீரிணை மூலம் உலகின் எண்ணெய், திரவ இயற்கை எரிவாயுப் பொருள்களில் கால்வாசி அனுப்பப்படுகிறது. அதில் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவை ஆசியாவுக்கானது. தற்போது கடல்வழிப் பாதைகளுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் உலக எரிசக்திப் பாதுகாப்புக்குக் கடும் ஆபத்தை உண்டாக்கியுள்ளன. அதுகுறித்து நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். எண்ணெய், திரவ இயற்கை எரிவாயுப் பொருள்களின் விலை தொடர்ந்து ஆட்டங்கண்டு வருகிறது. சரக்கு, காப்புறுதி, தளவாடக் கட்டணங்கள் வெகுவாகக் கூடியுள்ளன,” என்று ஆசியான் பொருளியல் சமூக மன்றம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் எரிசக்தி, போக்குவரத்துச் செலவுகள், உணவுக் கட்டமைப்பிலும் எதிரொலிக்கின்றன. உர விலை அதிகரித்துள்ளது. உர விநியோகத்தையும் அது பாதிக்கக்கூடும் என்று ஆசியான் கூறியது.
வாழ்க்கைச் செலவு, வட்டார அளவில் கூடியுள்ளதாக அமைச்சர்கள் குறிப்பிட்டனர். குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களும் சிறிய நிறுவனங்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தேவையற்ற வணிகத் தடைகளைத் தவிர்க்க ஏற்கெனவே கொண்டுள்ள கடப்பாட்டைத் தொடர்ந்து பின்பற்ற அவை உறுதிகூறியுள்ளன.
வட்டார அளவில் எண்ணெயைச் சேமித்துவைப்பது குறித்து ஆசியான் ஆராய்ந்து வருகிறது.
வட்டாரப் பொருளியல் மீள்திறனை வலுப்படுத்த அனைத்துலக நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதை மேலும் உறுதிப்படுத்தவும் ஆசியான் இணங்கியுள்ளது.

