லாவோஸ் நாட்டில் சட்டவிரோதமாகக் கூண்டிற்குள் அடைக்கப்பட்ட 27 கரடிகளைச் சிங்கப்பூரர் கார்த்திரீஷ் சந்திரா ‘ஃபிரீ தி பேர்ஸ்’ (Free the Bears) என்ற வனவிலங்குப் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து மீட்டார். இந்த மீட்பு நடவடிக்கை கடந்த மே மாதம் நடந்தது.
இந்நிலையில், ஜூலை 2ஆம் தேதி மீட்கப்பட்ட கரடிகள் வெளிப்புற நடவடிக்கைகளில் சுதந்திரமாக ஈடுபட்டன.
மீட்கப்பட்ட கரடிகளில் ஒரு கரடிக்கு ஜிங் லீ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைக்குப் பெரிய அளவில் உதவிய லாவோஸ் சட்ட அமலாக்க அதிகாரி ஒருவரின் நினைவாக அந்தப் பெயர் சூட்டப்பட்டது.
வெளிநாட்டினருக்குச் சொந்தமான ஒரு பண்ணையிலிருந்து மீட்கப்பட்ட கரடிகள் பல ஆண்டுகளாக இரும்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
மீட்கப்பட்ட கரடிகள் தங்களின் வாழ்க்கையை இனி லுவாங் பிரபாங் வனவிலங்குத் தோட்டத்தில் தொடரும்.
இது குறித்து கார்த்திரீஷ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசினார். “நமக்கு எளிமையாகவோ அல்லது அடிப்படையானதாகவோ தோன்றும் விஷயங்கள் கரடிகளுக்கு முற்றிலும் புதியவை. அவை குட்டிகளாக இருந்தபோது காட்டிலிருந்து திருடப்பட்டன. அவை ஒருபோதும் உறுதியான, இயற்கையான தரையில் நின்றதில்லை, மரத்தில் ஏறியதில்லை, குளத்தில் நீந்தியதில்லை அல்லது கடினமான காய்கறிகளைக் கூட சாப்பிட்டதில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
“தற்போது இந்த விலங்குத் தோட்டம் மீட்கப்பட்ட கரடிகளுக்குப் புதிய இல்லமாக இருக்கும். நீர்நிலைகளைக் கொண்ட ஒரு பெரிய காட்டுப் பகுதியாக விலங்குத் தோட்டம் உள்ளது. இதில் கரடிகள் சுதந்திரமாக நடமாட முடியும்,” என்று கார்த்திரீஷ் மகிழ்ச்சி தெரிவித்தார்.
சட்டவிரோதப் பண்ணையில் சோள மாவு மட்டுமே கரடிகளுக்கு உணவாக வழங்கப்பட்டது. மீட்கப்பட்ட கரடிகள் ஒன்று முதல் மூன்று வயதுடையவை என்று அவர் கூறினார்.
“கரடிகள் உடனடியாகத் தங்களின் புதிய சூழலைக் கவனிக்கத் தொடங்கியுள்ளன. மேலும் மோப்பம் பிடிக்கவும் செய்கின்றன. கரடிகள் செடிகளையும் தங்களைக் கவனித்துக் கொள்பவர்களையும் உன்னிப்பாகவும் பார்க்கின்றன,” என்று கார்த்திரீஷ் சொன்னார்.
கரடிகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்குவதற்காக மருத்துவப் பரிசோதனைகள், நீர்ச்சத்து மற்றும் நிலையான ஊட்டச்சத்துகள் வழங்கப்பட்டு வருவதாக கார்த்திரீஷ் கூறினார்.
கரடிகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

