கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வீட்டுக்காவல் மனுவுக்கு எதிராக அந்நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரி மேல்முறையீடு செய்திருந்தார்.
அந்த மேல்முறையீட்டை மலேசிய உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (ஆகஸ்ட் 13) நிராகரித்தது.
1எம்டிபி மோசடி வழக்கு தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து நஜிப் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.
ஊழலில் ஈடுபட்டதற்காக அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மலேசியாவின் முன்னாள் மாமன்னரான பாஹாங் சுல்தான் அப்துல்லா அகமது ஷா, நஜிப்பின் தண்டனைக்காலத்தைப் பாதியாகக் குறைத்தார்.
வீட்டுக்காவல் மூலம் எஞ்சியுள்ள தண்டனைக்காலத்தைக் கழிக்க நஜிப் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.
வீட்டுக்காவலில் தண்டனைக்காலத்தைக் கழிக்க தமக்கு அனுமதி வழங்கும் அரச ஆவணம் இருப்பதாக நஜிப் தரப்பு கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
அதைப் பெற அது விண்ணப்பம் செய்துள்ளது.
அந்த ஆவணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருப்பதை நிறைவேற்ற வேண்டும் என்று நஜிப் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அந்த ஆவணம் இருக்கிறது என்று முன்னாள் மாமன்னரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால், அப்படி ஓர் ஆவணம் உள்ளதா இல்லையா என்பது தங்களுக்குத் தெரியாது என்று மலேசிய அரசு அதிகாரிகள், பொது மன்னிப்புச் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பிற்சேர்க்கை ஆணை இருப்பதை புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 13) மலேசிய உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. ஆனால் அதன் உண்மைத்தன்மையை நீதிபதிகளால் உறுதி செய்ய முடியவில்லை.
நஜிப் சமர்ப்பித்துள்ள மனு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதியின்கீழ் வழக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.