ரிலா மாணவத் தொண்டூழியர்களுக்கு நிலையான படித்தொகை: அமைச்சர் சைஃபுதீன்

ரிலா மாணவத் தொண்டூழியர்களுக்கு நிலையான படித்தொகை: அமைச்சர் சைஃபுதீன்

2 mins read
5d17627d-1530-4ec7-9b64-e3f2f10c002c
ரிலா அமைப்பில் தொண்டூழியம் புரியும் பல்கலைக்கழக அல்லது கல்லூரி மாணவர்கள் படித்தொகை பெறத் தொடங்குவார்கள் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் அறிவித்தார். - படம்: மலாய் மெயில்

புத்ராஜெயா: ரிலா அமைப்பில் தொண்டூழியம் புரியும் பல்கலைக்கழக அல்லது கல்லூரி மாணவர்கள் படித்தொகை பெறத் தொடங்குவார்கள் என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) அறிவித்துள்ளார்.

அந்தப் படித்தொகைக்குக் கூடுதல் நிதி எதுவும் தேவைப்படாது என்று தமது அமைச்சின் மாதாந்தரக் கூட்டத்தில் திரு சைஃபுதீன் தெரிவித்தார். மாறாக, அது உள்துறை அமைச்சிற்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்தே பெறப்படும் என்றார் அவர்.

“இதை இனியும் தாமதப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தேவையான கணக்கீடுகளை மேற்கொள்வோம். இதற்குக் கூடுதல் நிதி தேவைப்படாது என்றே நினைக்கிறேன்,” என்று ரிலா அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பங்கேற்பாளர்களிடம் அமைச்சர் கூறினார்.

திட்டமிடப்பட்டுள்ள அந்த நிலையான படித்தொகை, சீருடைத் தொண்டூழியர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் தினசரிப் படித்தொகை வழங்குவதற்கான விரிவான முயற்சியின் ஒரு பகுதியாகும்.

“தொண்டூழியர்களின் நலனில் நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். இவ்வாண்டுக்கும் அடுத்த ஆண்டுக்குமான நமது கணக்கீடுகள் குறித்து ரிலா தலைமை இயக்குநருடன் நான் நடத்திய கலந்தாலோசனைபடி, ‘ரிலாசிஸ்’ உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டால் இதற்கான நிதி ஒதுக்கீடு அவ்வளவு பெரிதாக இருக்காது,” என்று அமைச்சர் கூறினார்.

மாணவர்களுக்கான அந்தப் படித்தொகை, சாதாரண ரிலா உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே இருக்கும் என்றும் திரு சைஃபுதீன் தெரிவித்தார்.

சாதாரண ரிலா உறுப்பினர்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு 8 மலேசிய ரிங்கிட் வழங்கப்படுகிறது. அதேவேளையில், அதிகாரிகளுக்கு ஒரு மணிநேரத்திற்குக் கூடுதலாக 1.80 ரிங்கிட் வழங்கப்படுகிறது. அந்தப் படித்தொகையை உயர்த்துவதற்கான நடவடிக்கையில் உள்துறை அமைச்சு தற்போது ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
படித்தொகைமலேசியாமாணவர்