கோலாலம்பூர்: சீனாவின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சில்லுகளின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள், சீன நிறுவனங்களுடன் மலேசியா இணைந்து செயல்படுவதைத் தடுக்காது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) வெளியிடப்பட்ட நேர்காணல் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியா சீனாவுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ ஆதரவாகச் சாயவில்லை என்று ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ ஊடகத்திடம் பிரதமர் அன்வார் தெரிவித்தார். இருப்பினும், தற்போதுள்ள பண்பாட்டு, வட்டாரத் தொடர்புகள் காரணமாக சீனாவுடன் தொடர்புகொள்வது பொதுவாக எளிதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடனான மலேசியாவின் உறவு குறித்தோ அல்லது வாஷிங்டனுடனான தொழில்நுட்ப ஏற்பாடுகள் குறித்தோ சீனா எந்தக் கவலையையும் எழுப்பவில்லை என்றும் பிரதமர் அன்வார் அந்த நேர்காணலில் கூறினார்.
“சீனாவுடன் மிகச் சிறந்த உறவைக் கொண்டிருப்பது, அமெரிக்காவுடன் தொடர்ந்து ஈடுபடுவதிலிருந்து எங்களைத் தடுக்காது. சீனாவும் இதனைப் புரிந்துகொண்டுள்ளதுபோல் தெரிகிறது. நான் சீனாவை நோக்கிச் சற்றுச் சாய்வதாக மக்கள் கூறுகின்றனர். அது உண்மையன்று,” என்று திரு அன்வார் விளக்கமளித்தார்.
