கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு முன்கூட்டியே விடுவிக்கப்படலாம் என்று வதந்திகள் பரவி வந்தாலும் அவரது கோரிக்கையை மன்னிப்பு வாரியம் தொடர்ந்து பரிசீலித்து வருகிறது.
இதனால் ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தேசிய முன்னணியின் முக்கிய கட்சியான அம்னோ, தனது முன்னாள் தலைவரின் வருகையைக் கொண்டாட இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.
செப்டம்பர் 11ஆம் தேதியன்று மலேசிய மாமன்னரும் ஜோகூர் சுல்தானுமான இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, நஜிப்பின் விண்ணப்பம் ஒத்தி வைக்கப்பட்டதாக கூட்டரசுப் பிரதேசங்களின் மன்னிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
“வருகின்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் நஜிப்பின் மன்னிப்பு குறித்த முடிவை ஒத்திவைக்க மாமன்னர் ஒப்புதல் அளித்துள்ளார்,” என்று பிரதமர் அலுவலகத்தின் சட்டப் பிரிவு செப்டம்பர் 11 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
திரு நஜிப், 73, நாட்டின் பிரதமராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்தார்.
மலேசிய அரசாங்க நிதியான ‘1மலேசியா டெவலப்மென்ட் பெர்ஹாட்’ (1எம்டிபி) தொடர்பான வழக்கில் நம்பிக்கை மோசடி, அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஜூலை 2018ல் கைது நஜிப் செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டார்.
நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அவர், 1எம்டிபி-யின்கீழ் இயங்கிய முன்னாள் நிறுவனமான ‘எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல்’ நிதியிலிருந்து 42 மில்லியன் மலேசிய ரிங்கிட் (S$13 மில்லியன்) முறைகேடு செய்ததற்காக ஆகஸ்ட் 2022லிருந்து 12 ஆண்டுகள் சிறை தண்டனையை அவர் அனுபவிக்கத் தொடங்கினார்.
2024ஆம் ஆண்டில் அப்போதைய மலேசிய மன்னரான சுல்தான் அப்துல்லா அகமட் ஷா தலைமையிலான மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், நஜிப்பின் சிறைத் தண்டனை பாதியாகக் குறைக்கப்பட்டது. மேலும், அவருக்கு விதிக்கப்பட்ட 210 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையும் 50 மில்லியன் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டது.

