தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வியட்னாமுக்கு நிவாரணம்: சிங்கப்பூர் ஏற்பாடு

2 mins read
2d2d0ab9-e1e5-491c-9b29-d12cf4ec6aa1
சிங்கப்பூரில் இயங்கும் ‘காரிடாஸ்’ மனிதாபிமான உதவி அமைப்பின் பிரதிநிதி, சிங்கப்பூர் ஆயுதப் படையின் சாங்கி வட்டார மனிதநேய உதவி, பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு நிலைய அதிகாரியைச் சந்தித்தார். - படம்: சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சு

கடந்த மாதங்களில் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்சூறாவளிகளால் பாதிப்படைந்துள்ள வியட்னாமுக்கு ஐந்து டன் அளவுக்கும் மேற்பட்ட உதவிப்பொருள்களை அனுப்பிவைக்க சிங்கப்பூர் ஆயுதப் படை ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் ‘கஜிகி’ சூறாவளி வியட்னாமின் வடக்கில் மத்தியக் கடற்கரையில் பெருமழையை ஏற்படுத்தியது.

அதன் பிறகு செப்டம்பர் 29ஆம் தேதி ‘புவாலோய்’ சூறாவளி வடக்கில் மத்திய வியட்னாமில் கரைகடந்தது.

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதியன்று, ‘மட்மோ’ சூறாவளி, ஹனோய் நகரைத் தாக்கி, பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

சிங்கப்பூர் ஆயுதப் படை உள்ளிட்ட அரசாங்கம் சாராத மனிதாபிமான அமைப்பு வழங்கியுள்ள ஐந்து டன்கள் அளவிலான நிவாரண உதவிப்பொருள்கள் வர்த்தக விமானங்கள் வழியாக வியாட்னாமுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று சிங்கப்பூர்த் தற்காப்பு அமைச்சு சனிக்கிழமை (அக்டோபர் 25) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

‘காரிடாஸ்’ மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண முயற்சிகள் என்ற சிங்கப்பூரில் இயங்கும் அரசு சாரா அமைப்பின் பெயர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வியட்னாம் அரசாங்கம் கேட்டுக்கொண்டபடி, பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான குளிர்தவிர்க்கும் போர்வைகள், சுகாதாரப் பொருள்கள் போன்றவை உதவிப் பொருள்களில் அடங்கும்.

வியாட்னாமுக்கு உதவிப் பொருள்களை அனுப்பும் நடவடிக்கையை சிங்கப்பூர் ஆயுதப் படையின் சாங்கி வட்டார மனிதநேய உதவி, பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு நிலையம் (Changi RHCC) மேற்கொள்கிறது.

வட்டார மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்கு உதவிட சிங்கப்பூர் ஆயுதப் படையும் ஒருங்கிணைப்பு நிலையமும் தயாராக இருப்பதாக அதன் இயங்குநர் தெரிவித்தார்.

சிங்கப்பூரிலும் வட்டார நாடுகளிலும் செயல்படும் அரசாங்கம் சாராத பொது அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற தமது அமைப்பின் உறுதிப்பாட்டை இயக்குநர் ‘கர்னல்’ லியு சி சூன் குறிப்பிட்டார்.

இருநாடுகளுக்கு இடையே 2022ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்ட இருதரப்புத் தற்காப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்படி, இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன என்று தற்காப்பு அமைச்சு கூறியது.

குறிப்புச் சொற்கள்