கோலாலம்பூர்: மலேசியாவில் ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஆர்வலர்கள், 1எம்டிபி போன்ற சம்பவங்கள் நடப்பதைத் தவிர்க்கப் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் தேவை என்று கூறியிருக்கின்றனர்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்குச் சென்ற வாரம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் ($5.7 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான அரசாங்க நிதி மோசடியில் தீர்ப்பு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் கூக்குரல் எழுந்துள்ளது.
72 வயது நஜிப், இதற்கு முன்னர் 1எம்டிபியின் தொடர்பிலான இன்னொரு மோசடிக்காக ஆறாண்டுச் சிறைத்தண்டனையை நிறைவேற்றி வருகிறார்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்க முயன்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் தொடர்பில் இம்மாதம் 26ஆம் தேதி அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் நஜிப்புக்கு 15ஆண்டுச் சிறைத்தண்டனையும் கிட்டத்தட்ட $3 பில்லியன் வெள்ளி அபராதமும் விதித்தது. குற்றச்சாட்டுகளை மறுத்த நஜிப், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறார்.
பொதுவாகச் சமூக அமைப்புகள் தீர்ப்பை வரவேற்றன. இருப்பினும் பலர், அது புதிய கேள்விகளை எழுப்பியிருப்பதாகக் கூறினர்.
மலேசியாவின் அதிகார அமைப்புகளின் சுதந்திரம், 1எம்டிபி மோசடி பத்தாண்டுக்கு முன்னர் வெளிச்சத்திற்கு வந்த பிறகு தீர்வுகாணப்படாமல் இருக்கும் முக்கியப் பிரச்சினைகள் அவற்றுள் அடங்கும்.
அமைப்புகள் சீர்திருத்தப்படும் என்று அரசாங்கம் நெடுங்காலத்திற்கு முன்பு கூறியிருந்த உத்தரவாதத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அண்மைய தீர்ப்பு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாக டிரான்ஸ்பரன்சி இன்ட்டர்நேஷனல் மலேசியா அமைப்பின் தலைவர் ரேமன் ராம் தெரிவித்தார்.
தலைமைச் சட்ட அதிகாரி, அரசாங்கத்தின் தலைமைச் சட்ட ஆலோசகராகத் செயல்படாமல் அரசாங்க வழக்கறிஞராக இயங்க வழிவகுப்பது உள்ளிட்ட திட்டங்கள் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில் மலேசியாவில் நிர்வாகச் சிக்கல்களைச் சீர்செய்ய, அரசாங்கம் கடுமையாகப் பாடுபடுவதாகப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார். இருப்பினும் ஊழல் நடவடிக்கைகளைத் துடைத்தொழிப்பதில் சவால்கள் இருப்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
வழக்கு விசாரணைகளில் பாரபட்சம் இருப்பதாகக் கூறப்படுவதைத் திரு அன்வார் நிராகரித்தார். தமது அரசியல் செயலாளர், நாட்டின் ராணுவத் தலைவர் உட்பட அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் நடத்தப்பட்ட புலன்விசாரணைகளை அவர் சுட்டினார்.
ஊழல், பாரபட்சத் தடுப்பு நிலையமும் அதன் தொடர்பில் கருத்துக் கூறியிருந்தது. இடர்பாடுகள் தொடர்வதையே 1எம்டிபி வழக்குக் காட்டியிருப்பதாக அது சொன்னது. , அரசியல் நிதியைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றும்படி அரசாங்கத்தை அதன் நிறுவனர் சிந்தியா கேப்ரியல் கூறினார். திரு அன்வார் தொடர்ந்து அம்னோ கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது குறித்தும் அவர் அக்கறை தெரிவித்தார்.

