இஸ்லாமாபாத்: தனக்கு வழங்கப்பட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு ஈடாக ஜேஎஃப்-17 (JF-17) போர் விமான ஒப்பந்தங்களை வழங்க சவூதி அரேபியாவுடன் பாகிஸ்தான் பேச்சு நடத்தி உள்ளதாக பாகிஸ்தான் தரப்பைச் சேர்ந்த இரு தகவல்கள் கூறின.
கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இருதரப்பு தற்காப்பு உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ராணுவ ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தும் முயற்சியாக அந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அந்தத் தகவல்கள் குறிப்பிட்டன.
கடும் நிதி நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி இருக்கும் வேளையிலும் சவூதி அரேபியா தனது பாதுகாப்புப் பங்காளித்துவத்தை மறுவடிவமைத்து வரும் வேளையிலும் இரு நாடுகளும் ராணுவப் பேச்சை நடத்தி உள்ளன.
ஜேஎஃப்-17 போர் விமானங்களை சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து வடிவமைத்து பாகிஸ்தானில் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளும், எந்தவொரு தாக்குதலுக்கும் எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது அவை கையெழுத்திட்ட உடன்பாட்டின் முக்கிய அம்சமாகும். இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு எதிராக ஒரு தாக்குதல் நடந்தால், அது இரு நாடுகளுக்கும் எதிரானதாகக் கருதப்படும் என உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘இஸ்லாமிக் நேட்டோ’ என்று அழைக்கப்படும் அந்த உடன்பாட்டின்படி, சவூதி அரேபியா மீது வேறு எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும், அது பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும்.
அதேபோல், பாகிஸ்தான் மீது இந்தியா உள்பட எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும் அது சவூதி அரேபியா மீது நடத்தப்பட்ட தாக்குதலாகப் பாா்க்கப்படும்.
சவூதி அரேபியாவிடம் இருந்து ஏற்கெனவே பாகிஸ்தான் அதிகக் கடன் பெற்றுள்ளது. அதில் பல கடன்களைத் திரும்பிச் செலுத்த வேண்டிய கால அவகாசம் நெருங்கிய நிலையில், பாகிஸ்தானால் அவற்றைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
தொடர்புடைய செய்திகள்
அதனால், கடனைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடுவை சவூதி அரேபியா ஒவ்வோர் ஆண்டும் நீட்டித்து வருகிறது.

