தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமய அதிகாரிகளின் தவறான நடத்தை பற்றித் தெரியப்படுத்துங்கள்: மலேசிய அமைச்சர்

2 mins read
0d46618e-ffee-4b97-8c31-3cf75ef0d5f4
மலேசியப் பிரதமர் அலுவலக (சமய விவகாரங்கள்) அமைச்சர் முகம்மது நா’யிம் மொக்தார். - படம்: பெர்னாமா / இணையம்

கோலா திரங்கானு: குற்றச் செயல்கள் அல்லது தவறான நடத்தையில் ஈடுபடும் சமய அதிகாரிகள், ஆசிரியர்களைப் பற்றித் தெரியப்படுத்துமாறு மலேசியாவின் பிரதமர் அலுவலக (சமய விவகாரங்கள்) அமைச்சர் முகம்மது நா’யிம் மொக்தார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

உரிய நடவடிக்கை எடுப்பதற்கு வகைசெய்ய அவ்வாறு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். புகார் பெற்றபின் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட சமய அதிகாரிகள் தற்காலிகப் பதவிநீக்கம் செய்யப்படலாம் அல்லது ஆசிரியராகப் பணியாற்றுவதற்கான அவர்களின் உரிமம் மீட்டுக்கொள்ளப்படலாம் என்று டாக்டர் நா’யிம் கூறியதாக மலாய் மெயில் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“தவறு இழைத்தது நிரூபணமானால் அவர்களின் உரிமங்கள் நீச்சயமாக மீட்டுக்கொள்ளப்படும். அதனால்தான் இத்தகைய சம்பவங்களைப் பற்றித் தெரியப்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன். குற்றங்களை நிரூபிக்காமல் உரிமங்களை மீட்டுக்கொள்வது கடினம்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 16) செய்தியாளர்களிடம் கூறினார்.

அண்மையில் சிலங்கூர் மாநிலத்தின் காஜாங் நகரில் பதின்ம வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் சமய ஆசிரியர் ஒருவருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதைக் கருத்தல்கொண்டே டாக்டர் நா’யிம் பேசினார்.

சமய அதிகாரிகள், நல்ல நடத்தையைப் பின்பற்றி சமூகத்துக்கு முன்னுதாரணமாக விளங்குவர் எனத் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இஸ்லாமிய ஒளிபரப்புப் பதிவுகள் தணிக்கை (Censorship of Islamic Broadcasting Materials) வழிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படுமாறு டாக்டர் நா’யிம் ஊடக நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

“இதன் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வழிமுறைகளை வெளியிடும் பொறுப்பை மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுப் பிரிவு (ஜாக்கிம்) கொண்டுள்ளது. வழிமுறைகளுக்கு இணங்கி நாடகங்களைத் தயாரிப்பதற்காகத்தான் அவை ஊடக நிறுவனங்களுக்கும் அமைப்புகளுக்கும் வெளியிடப்படுகின்றன,” என்றார் டாக்டர் நா’யிம்\.

குறிப்புச் சொற்கள்